தி ஹேக், டிச. 30- ஓஸ்லோவிலிருந்து ஆம்ஸ்டர்டம் நோக்கிச் சென்று கொண்டிருந்த கே.எல்.எம். கேல்1204 விமானம் நேற்று முன்தினம் இரவு நோர்வேயில் அவசரமாகத் தரையிறங்கியது. அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளதாக அந்த டச்சு விமான நிறுவனம் கூறியது.
அந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தின் உள்ளே பலத்த வெடிச் சத்தம் கேட்டதாக கே.எல்.எம். விமான நிறுவனப் பேச்சாளர் ஒருவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானி அந்த விமானத்தை ஓஸ்லோவிலிருந்து 150 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள டோர்ப் சென்டர்ஃபோர்ட் விமான நிலையத்திற்கு திருப்பியதாக அவர் தெரிவித்தார்.
அந்த விமானம் பாதுகாப்பாக விமான நிலையத்தில் தரையிறங்கியது. எனினும், ஓடு தடத்தில் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த போது வழுக்கி புல் தடத்தில் சிக்கி நின்றது என்றார் அவர்.
அந்த விமானத்திலிருந்த 176 பயணிகளும் ஆறு விமானப் பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக நோர்வே போலீசார் தெரிவித்தனர்.


