கோலாலம்பூர், டிச. 30 - சவுஜானா உத்தாமா, தாமான் ஸ்ரீ ஆலம் குடியிருப்பு
பகுதி அருகே உள்ள நீர் தேக்கத்தின் தடுப்புச் சுவர் நேற்று மாலை இடிந்து
விழுந்ததில் அருகிலுள்ள சுமார் 200 வீடுகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
பாதிக்கப்பட்ட பகுதியில் வெள்ளம் வடிந்துள்ள நிலையில் அப்பகுதி
மக்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றுவதா என்பது குறித்து
விவாதிக்கப்பட்டு வருவதாக பெஸ்தாரி ஜெயா தீயணைப்பு மற்றும் மீட்பு
நிலையத்தின் தலைவர் அஸ்ரில் இஸாய்டி அகமது கூறினார்.
வெள்ளம் வடிந்து விட்டது. ஒரு சாலையில் மட்டும் நீர் தேங்கியுள்ளது.
அங்கு முழுமையாக நீர் வடிவதற்கு சிறிது காலம் பிடிக்கும். ஆகவே, நீரை
உறிஞ்சி வெளியேற்றும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்
என்று அவர் சொன்னார்.
அங்கு நிலைமை சீரடைந்து வரும் நிலையில் குடியிருப்பாளர்களை வேறு
இடத்திற்கு மாற்றுவதன் அவசியம் குறித்து நாங்கள் பரிசீலித்து
வருகிறோம். இருப்பினும், இந்த வெள்ளத்தால் ஏற்பட்ட சேதத்தை
மதிப்பிடுவதற்கு சிறிது காலம் பிடிக்கும். இதன் தொடர்பான தகவல்களை
நாங்கள் தொடர்ந்து வழங்கி வருவோம் என்று அவர் பெர்னாமாவிடம்
தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் உயிருடச் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று
சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப்
பிரிவு உதவி இயக்குநர் அகமது முகலிஸ் மொக்தார் முன்னதாகக்
கூறியிருந்தார்.
இந்த வெள்ளச் சம்பவம் தொடர்பில் நேற்று மாலை 5.15 மணியளவில்
சவுஜான உத்தாமா தன்னார்வலர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல்
கிடைத்ததைத் தொடர்ந்து ஐந்து அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள்
அடங்கிய குழு அங்கு விரைந்தாக அவர் சொன்னார்.


