கோலாலம்பூர், டிச.30 - தென் கொரியாவில் உள்ள முவான் அனைத்துலக விமான நிலையத்தில் நேற்று நிகழ்ந்த கோர விமான விபத்து குறித்து தென் கொரியா மற்றும் தாய்லாந்திற்கு மலேசியா தனது அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டுள்ளது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது முகநூல் பதிவில் இந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் தனது ஆழ்ந்த வருத்தத்தையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக அப்பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த துயரமான நேரத்தில் தென் கொரியா மற்றும் தாய்லாந்து மக்களுடன் மலேசியா ஒற்றிணைந்து நிற்கிறது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நம்மில் பலர் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் ஒன்றுகூடி புத்தாண்டைப் பற்றி சிந்தித்து, நம் அன்புக்குரியவர்களை பொக்கிஷமாக கருதும் இந்நேரத்தில் ஏற்பட்ட இந்த பேரிடர், வாழ்க்கை எவ்வளவு விலைமதிப்பற்றது மற்றும் நிலையற்றது என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. நம்மைச் சுற்றியிருப்பவர்களைப் போற்றுவதற்கு சிறிது நேரம் ஒதுக்குவோம் என்று அவர் கூறினார்.
முன்னதாக, நேற்று காலை 9.07 மணியளவில் முவான் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளான தென் கொரிய விமானத்தில் மலேசியர்கள் யாரும் இல்லை என்பதை சியோலில் உள்ள மலேசிய தூதரகம் உறுதிப்படுத்தியது.
181 பயணிகளை ஏற்றிச் சென்ற ஜெட் விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி விமான நிலையத்தின் சுவரில் மோதி தீப்பிடித்ததில் குறைந்தது 151 பேர் உயிரிழந்த வேளையில் இருவர் மீட்கப்பட்டதாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
மீட்கப்பட்ட இருவரைத் தவிர விமானத்திலிருந்த இதர அனைவரும் கொல்லப்பட்டதாகக் கருதப்படுகிறது என்று அச்செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
அந்த விமானத்தில் பயணம் செய்த இரண்டு தாய்லாந்து பிரஜைகளைத் தவிர மற்ற 181 பேரும் கொரியர்களாவர்.


