ஷா ஆலம், டிச. 22- சிலாங்கூர் நல்வாழ்வு உதவித் திட்டம் (பிங்காஸ்) அடுத்த ஆண்டும் தொடரும் வேளையில் அத்திட்டத்தை தரம் உயர்த்தும் பணி வரும் 2026ஆம் ஆண்டு ஜூன் தொடங்கும் என்று சமூக நலத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் அன்ஃபால் சாரி தெரிவித்துள்ளார்.
இதன் தொடர்பில் தற்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்ட புதிய தவணையின் கீழ் தகுதியான பெறுநர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் 300 வெள்ளியை உதவித் தொகையாகப் பெறுவார்கள் என்று அவர் கூறினார்.
புதிய பிங்காஸ் தவணைக் காலம் கடந்த ஜூலையில் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளில் அதாவது 2026 ஜூலை மாதம் முடிவடைகிறது.
தற்போதைக்கு இந்த திட்டம் வழக்கம் போல் அடுத்த ஆண்டு தொடரும். முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள் 2026 ஜூன் மாதத்திற்கு பிறகு செயல்படுத்தப்படும் என்று அவர் சிலாங்கூர் மீடியாவிடம் கூறினார்.
இந்த பிங்காஸ் திட்ட அமலாக்க காலம் முடிவடைந்த பிறகு பிங்காஸ் பயனாளிகளுக்கு வேறு விதமான ஆதரவை வழங்குவது தொடர்பான வழிமுறைகளை மாநில அரசு ஆராய்ந்து வருவதாக அன்ஃபால் முன்னதாகக் கூறியிருந்தார்.
இல்திஸாம் சிலாங்கூர் பென்யாயாங் முன்னெடுப்பில் இடம் பெற்றுள்ள 46 திட்டங்களில் பிங்காஸும் ஒன்றாகும், வசதி குறைந்த குடும்பத்தினர் இரண்டு ஆண்டுகளுக்கு தலா 300 வெள்ளியை மாதாந்திர உதவித் தொகையாகப் பெறுவதற்கு இத்திட்டம் வகை செய்கிறது.
மாதம் 3,000 முதல் 5,000 வரை மற்றும் அதற்கும் குறைவாக வருமானம் பெறும் குடும்பங்களை இலக்காகக் கொண்ட இத்திட்டத்திற்கு 10 கோடியே 80 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.


