இஸ்தான்புல், டிச. 29- காஸாவின் வட பகுதியில் கடந்த எண்பது நாட்களாக நீடித்து வரும் இஸ்ரேலியப் படைகளின் முற்றுகை அங்குள்ள 75,000 பாலஸ்தீனர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாக அனைத்துலக சுகாதார நிறுவனம் அறிக்கை ஒன்றில் கூறியது.
கமால் அட்வான் மருத்துவமனையின் மீதான இஸ்ரேலின் தாக்குதலின் எதிரொலியாக காஸாவின் வட பகுதியில் இருந்த கடைசி மருத்துவமனையும் நிர்மூலமானதைத் தொடர்ந்து அந்த உலக அமைப்பு இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை கமால் அட்வான் மருத்துவமனைக்கு அருகிலுள்ள கட்டிடத்தை குறி வைத்து நடத்தப்பட்டத் தாக்குதலில் மூன்று மருத்துவப் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் உள்பட சுமார் 50 பேர் உயிரிழந்தனர்.
கமால் அட்வான் மருத்துவமனை மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து உலக சுகாதார நிறுவனம் மிகுந்த அதிர்ச்சியடைகிறது. இந்த தாக்குதல் காரணமாக காஸாவின் வட பகுதியில் உள்ள கடைசி மருத்துவமனையும் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. என்று அந்த அமைப்பு அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.
கடந்த 2024ஆம் ஆண்டு அக்டோபர் முதல் மருத்துவமனைகள் மற்றும் அதன் அருகிலுள்ள இடங்களை குறி வைத்து குறைந்தது ஐம்பது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியது.
வட காஸாவிலுள்ள மருத்துவமனைகளை மீண்டும் இயங்கச் செய்வதற்கான முன்னெடுப்புகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என அது வலியுறுத்தியது.
கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் முதல் காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை சுமார் 45,000 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு அந்த பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகள் முற்றாக அழிந்துள்ளன.
காஸா மீது நடத்தப்பட்டு வரும் இனப் படுகொலைக்காக இஸ்ரேல் மீது அனைத்துலக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.


