காஸா, டிச. 28- நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கி வரும் வட காஸாவின் பெய்ட் லாஹியாவிலுள்ள கமால் அட்வான் மருத்துவமனைக்கு இஸ்ரேலியப் படைகள் தீவைத்தன.
அந்த மருத்துவமனையிலிருந்த நோயாளிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய இஸ்ரேலிய இராணுவத்தினர் எறிபடைகளைக் கொண்டு அதன் மீது தாக்குதல் நடத்தியதோடு துப்பாக்கிச் சூடும் நடத்தியதாக பாலஸ்தீன செய்தி நிறுவனத்தின் நிருபர் கூறினார்.
காஸாவின் வட பகுதியில் செயல்பட்டு வந்த ஒரே மருத்துவமனையாக இந்த கமால் அட்வான் மருத்துவமனை விளங்கி வந்தது. இப்பிராந்தியத்திலுள்ள மக்கள் சிகிச்சை பெறும் ஒரே இடமாகவும் இது கருதப்பட்டது.
இந்த தீச்சம்பவத்தில் அறுவை சிகிச்சை அறை, ஆய்வகம், அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் ஆம்புலன்ஸ் சேவை உள்ளிட்ட முக்கியத் துறைகள் அழிந்தன.
அந்த மருத்துவமனையை இஸ்ரேலிய துருப்புகள் முற்றுகையிட்டதைத் தொடர்ந்து அங்கிருந்தவர்களுடனான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
அந்த மருத்துவமனை மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் அங்கிருந்த 170 பணியாளர்கள் உள்பட சுமார் 350 பேரை மருத்துவமனையின் வெளியே ஒன்றுகூடும்படி இஸ்ரேலிய இராணுவம் பணித்ததாக கூறப்படுகிறது.
குளிர் நிறைந்த சூழலில் நோயாளிகள், அவர்களுடன் உடனிருந்தவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை உடைகளை அகற்றும்படி பணித்த இராணுவத்தினர் அவர்களை மருத்துவமனைக்கு வெளியே அடையாளம் தெரியாத இடத்திற்கு கொண்டுச் சென்றனர்.


