கோலாலம்பூர், டிச. 28- இங்குள்ள மலேசிய தேசிய நூலகம் (பி.என்.எம்.) வரும் ஜனவரி 2ஆம் தேதி தொடங்கி காலை 10.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை செயல்படும். தற்போது மாலை 5.00 வரை மட்டுமே அந்த நூலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த நேர அதிகரிப்பு புக்கிட் டாமன்சாரா பொது நூலகம், புக்கு2யு ராடியா புக்கிட் ஜெலுத்தோங், மக்கோத்தா செராஸ் ஏயோன் பேரங்காடி, செத்தியாவங்சா ஏயு2 ஏயோன் பேரங்காடியில் உள்ள சமூக நூலகங்களையும் உள்ளடக்கியிருக்கும் என்று மலேசிய தேசிய நூலகத்தின் துணைத் தலைமை இயக்குநர் ஏடி இர்வான் ஜூல்கிப்ளி கூறினார்.
இது தவிர, அஞ்சோங் பெஸ்தாரி பி.என்.எம். நூலகமும் மீண்டும் செவ்வாய் தொடங்கி ஞாயிறு வரை செயல்படும் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
அஞ்சோங் பெஸ்தாரி பி.என்.எம். மீண்டும் திறக்கப்படுவதை முன்னிட்டு முதலில் வரும் 100 பேருக்கு தேசிய நூலகம் சிறப்பு நினைவுப் பரிசினை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய நூலகத்திற்கு வருகை புரிந்து அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு பொது மக்களை கேட்டுக் கொள்வதாக அவர் சொன்னார்.


