தோக்கியோ, டிச. 27 - ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபா எதிர்வரும் ஜனவரி 9 முதல் 12 வரை மலேசியா மற்றும் இந்தோனேசியாவுக்கு அதிகாரப்பூர் வருகை மேற்கொள்ளவுள்ளார்.
விதிகள் அடிப்படையிலான சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் ஒத்துழைப்பை தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் வலுப்படுத்துவதற்காக அவர் இப்பயணத்தை மேற்கொள்கிறார்.
இந்தப் பயணத்தின் போது மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுவதாக ஜப்பானின் கியோட்டோ செய்தி நிறுவனம் கூறியது.
தென்கிழக்காசிய நாடுகள் அமைப்பின் தலைவராக மலேசியா அடுத்தாண்டு பொறுப்பேற்கவுள்ளது.
தென்கிழக்காசியாவில் உள்ள முக்கிய கடல் பாதைகளுக்கு அருகில் அமைந்துள்ள நாடுகளுடன் ஜப்பான் உறவுகளை வலுப்படுத்துவது அவசியம் என்று அமைச்சரவைத் தலைமைச் செயலாளர் யோஷிமாஸா ஹயாஷி இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்புகள் தலைவர்களுக்கிடையே தனிப்பட்ட உறவுகளை வலுப்படுத்துவதற்கும் இருதரப்பு பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கும் பல்வேறு உலகளாவிய சவால்களில் ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்துவதற்கும் வாய்ப்பாக அமையும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அவர் கூறினார்.
அக்டோபர் மாதம் பதவியேற்றதிலிருந்து இஷிபா பல தரப்பு பேச்சுவார்த்த்தைகளில் கலந்துகொள்வதற்காக பல வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளார். ஆனால், இருதரப்பு பேச்சு வார்த்தைகளுக்காக மட்டுமே வருகை புரிவது இதுவே முதல் முறையாகும்.


