கோலாலம்பூர், டிச. 27 - வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சில் அண்மையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை அரசியலாக்கும் பாஸ் கட்சகயின் நடவடிக்கை மலேசியாவின் பல இன மற்றும் பல மத சமூகத்தின் உரிமைகளை அவமரியாதை செய்யும் வகையில் உள்ளதாக ஜசெக தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பாஸ் கட்சியின் இந்நடவடிக்கையை கடுமையாக விமர்சனம் செய்த ஜசெக மத்திய செயற்குழு உறுப்பினர்களான ஷேக் உமர் பகாரிப் அலி, யோங் சைஃபுரா ஓத்மான் மற்றும் ஷியாட்ரெட்ஜான் ஜோஹன் ஆகியோர், கூட்டரசு அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள அனைத்து சமூகங்களின் உரிமைகள் மற்றும் நலன்களை அந்த கட்சி பாதுகாத்து நிலைநிறுத்த வேண்டுமே தவிர குறுகிய அரசியல் நோக்குடன் பிளவுபடுத்தும் போக்கை கடைபிடிக்கக்கூடாது என்று வலியுறுத்தினர்.
மலேசியாவின் இன மற்றும் சமய வேறுபாடு கொண்டாடப்பட வேண்டும், புரிந்து கொள்ளப்பட வேண்டும், மதிக்கப்பட வேண்டும். மாறாக, மதத்தின் போர்வையில் அரசியல் லாபத்திற்காகப் பிளவுபடுத்தக்கூடாது என்று அவர்கள் கூறினர்.
நாட்டில் வேற்றுமையில் ஒற்றுமையைக் கொண்டாடத் தவறிய பாஸ் கட்சி தீவிர அரசியலைக் கைவிடுட்டு தேசிய அரசியலில் மலேசியாவின் உணர்வைத் தழுவும்படி கேட்டுக் கொள்கிறோம். உண்மையில், பன்முகத்தன்மை என்பது நமது வலிமையின் மூலக்கல்லாகும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்
அவர்களின் செயல் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட்டத்தை வாழ்த்தி வரவேற்ற பாஸ் பொதுச்செயலாளர் டத்தோஸ்ரீ தகியுடின் ஹாசனின் அறிக்கைக்கு முரணாக உள்ளது என்றும் அவர்கள் கூட்டறிக்கை ஒன்றில் தெரிவித்தனர்.
கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடுவோருக்காக குறிப்பாக சபா மற்றும் சரவாக் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்காக அந்த உபசரிப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறிய அவர்கள், அந்நிகழ்வில் கலந்துகொள்ள யாரும் கட்டாயப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.


