ஜோர்ஜ் டவுன், டிச 27:கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவின் மேற்குக் கடற்கரையில் ஏற்பட்ட 9.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பினாங்கின் கடற்கரையையும் கடுமையாகப் பாதித்தது.
இந்த சுனாமி பலரின் வாழ்க்கையை சிதைத்தது. இச்சம்பவத்தின் போது ஏ. சுப்பையா (75) , எல். அன்னல்மேரி (62) மற்றும் 22 நாட்களான குழந்தை எஸ். துளசி ஆகியோர் வாழ்க்கையின் மிகக் கஷ்டமான தருணத்தை சந்தித்தனர்.
ஓட்டலின் அறையில் உள்ள மெத்தையில் உறங்கிக் கொண்டிருந்த சமயம் சுனாமி அலை துளசியை கடலுக்கு இழுத்துச் சென்றது. அதிர்ச்சியூட்டும் விதமாக, இரண்டாவது அலை துளசியை மீண்டும் கடற்கரைக்கு பத்திரமாகக் கொண்டு வந்து சேர்த்தது. அதனால், இவர் ‘சுனாமி மிராக்கிள் பேபி’ என உலகமெங்கும் அறியப்பட்டார்.
அந்த சோகமான சம்பவத்தை நினைவுகூர்ந்த அன்னல்மேரி, கணிமைக்கும் நொடியில் அனைத்தும் நடந்தது என்றார். முதல் அலையின் போது துளசி உறங்கிய அறையில் தண்ணீர் கழுத்து அளவிற்கு உயர்ந்தது,” என்றார் அவர்.
40 நிமிடங்களுக்குப் பிறகு, தங்கள் குழந்தையைத் தேடும் முயற்சியில் தோல்வியடைந்த தம்பதியரிடம் இந்தோனேசிய தொழிலாளி ஒருவர் துளசி கடற்கரையில் உள்ள கட்டுமானத் தளத்தில் உள்ள மெத்தையில் சிக்கி பாதுகாப்பாக இருப்பதாக தகவல் அளித்தார்.
சுப்பையா தனது குடும்பத்தின் மீது கடவுள் காட்டிய கருணையை கண்டு வியந்ததோடு, சுனாமி அனுபவத்தை தனது வாழ்க்கையில் ஒருபோதும் மறக்கமுடியாது எனக் குறிப்பிட்டார்.
தற்போது 20 வயதாகிய துளசி யுனிவர்சிட்டி சைன்ஸ் மலேசியாவில் (யுஎஸ்எம்) கணிதத் துறையில் இளங்கலைப் பட்டப் படிப்பை மேற்கொண்டு வருகிறார்.
“சுனாமி சம்பவம் குறித்து எனக்கு நான்கு வயது உள்ளபோது என் தந்தையிடம் கேட்டு அறிந்தேன். அந்நிகழ்வை நினைவுகூர்ந்து பிரார்த்தனை செய்வது எங்கள் குடும்பத்தின் வருடாந்திர நடைமுறையாக உள்ளது,” என்று துளசி கூறினார்.
– பெர்னாமா


