ஈப்போ, டிச.27:- இருபது மாதங்களாக தவணைப் பணத்தை செலுத்தாத நிலையில் தனது மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்படுவதைக் கண்டு சினமடைந்த பெண்மணி ஒருவர் அந்த மோட்டார் சைக்கிளுக்கு தீ வைக்கும் விபரீதச் செயலில் இறங்கினார்.
சமூக ஊடகங்களில் வைரலான இச்சம்பவம் தொடர்பில் 40 வயதுடைய அப்பெண் விசாரணைக்காக போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று மாலை தைப்பிங் அருகே உள்ள பொக்கோக் அஸ்ஸாமில் நிகழ்ந்ததாக தைப்பிங் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமது நாசீர் இஸ்மாயில் கூறினார்.
தைப்பிங்கில் உள்ள பொக்கோக் அஸ்ஸாம், ஜாலான் மஸ்ஜிட்டில் ஒரு பெண் கருப்பு நிற ஹோண்டா ஆர்.எஸ்.எக்ஸ். ரக மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் தொடர்பாக நேற்று மாலை 4.27 மணிக்கு ஆடவர் ஒருவரிடமிருந்து காவல்துறைக்கு புகார் வந்ததாக அவர் சொன்னார்.
குற்றவியல் சட்டத்தின் 435 பிரிவின் கீழ் விசாரணைக்காக அப்பெண் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
கடந்த 20 மாதங்களாக தவணைப் பணத்தைச் செலுத்தாத காரணத்தால் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்ய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையால் அப்பெண் அதிருப்தி அடைந்ததே இந்த சம்பவத்திற்கான காரணம் என்பது தொடக்கக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று முகமது நாஸிர் குறிப்பிட்டார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 435 வது பிரிவின் கீழ் இச்சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அவர் சொன்னார்.


