NATIONAL

ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக விமான நிலையத்தில் பிரத்தியேக வழித்தடம் - குணராஜ் கோரிக்கை

27 டிசம்பர் 2024, 7:17 AM
ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக விமான நிலையத்தில் பிரத்தியேக வழித்தடம் - குணராஜ் கோரிக்கை

(ஆர்.ராஜா)

ஷா ஆலம், டிச. 27- நேர்த்திக் கடனைச் செலுத்துவதற்கு இந்தியா

செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக கோலாலம்பூர் அனைத்துலக

விமான நிலையத்தில் பிரத்தியேக வழித்தடம் ஏற்படுத்தித் தரப்பட

வேண்டும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி.குணராஜ்

வலியுறுத்தியுள்ளார்.

சமய நெறிக்கேற்ப பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நேர்த்திக் கடனைச்

செலுத்த சபரி மலைக்குச் செல்லும் பக்தர்களுக்கு இந்த பிரத்தியேக

வசதியை ஏற்படுத்தித் தருவது குறித்து போக்குவரத்து அமைச்சு,

மலேசியன் ஏர்போர்ட்ஸ் பெர்ஹாட், குடிநுழைவுத் துறை மற்றும் விமான

நிறுவனங்கள் பரிசீலிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரை

சுமார் 50,000 ஐயப்ப பக்தர்கள் நேர்த்திக் கடனைச் செலுத்துவதற்காக

மலேசியாவிலிருந்து இந்தியா செல்லவிருப்பதால் அவர்களின் பயணம்

எளிதாகவும் சீராகவும் அமைவதற்கு இந்த சிறப்பு வழித்தடம் பெரிதும்

துணை புரியும் என்று அவர் சொன்னார்.

மலேசிய ஐயப்ப சேவை சங்க கூட்டமைப்பின் தலைவர்

கே..யுவராஜாவுடன் நடத்தப்பட்ட சந்திப்பின் போது இந்த கோரிக்கை

முன்வைக்கப்பட்டதாக குணராஜ் தெரிவித்தார்.

நேர்த்திக் கடனைச் செலுத்த விரும்பும் ஐயப்ப பக்தர்கள் 48 முதல் 60

நாட்கள் வரை விரதமிருப்பது, காலணி அல்லது செருப்புகளை அணிவதைத் தவிர்ப்பது, கருப்பு வேட்டியை மட்டும் அணிவது, சைவ உணவுகளை மட்டுமே உண்பது போன்ற கடுமையான கட்டுப்பாடுகளைப் பின்பற்றுகின்றனர்.

மேலும், இந்த யாத்திரை செல்லும் ஐயப்ப பக்தர்களில் பெரும்பாலோர்

முதியவர்களாக உள்ளனர். அவர்களின் பயணம் சௌகர்யமாக அமைவதை

உறுதி செய்ய கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது.

ஐயப்ப பக்தர்களுக்கு விமான நிலையத்தில் விஷேச தடத்தை ஏற்படுத்தித்

தருவதன் மூலம் நெரிசலைக் குறைக்கவும் பயண நடைமுறைகளை

விரைவாக முடித்து அவர்கள் எளிதாக விமானத்திற்குச் செல்வதற்குரிய

வாய்ப்பினை ஏற்படுத்தவும் இயலும் என்று குணராஜ் தெரிவித்தார்.

இந்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில் இந்த வருடாந்திர

புனித யாத்திரையை சீராக மேற்கொள்வதற்கு வாய்ப்பு கிட்டும் என்பதோடு

பக்தர்களுக்கு ஆதரவும் உரிய மரியாதையும் தரும் விதமாகவும் அமையும்

என்று அவர் சொன்னார்.

ஆகவே, மேற்கண்ட அம்சங்களைக் கருத்தில் கொண்டு ஐயப்ப

பக்தர்களுக்கு பிரதியேகத் தடத்தை ஏற்படுத்தி தரும்படி ஐயப்ப பக்தர்கள்

சார்பில் தாம் அரசாங்கத்தை குறிப்பாக, போக்குவரத்து அமைச்சர்

அந்தோணி லோக் அவர்களை கேட்டுக் கொள்வதாக குணராஜ்

தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.