இஸ்தான்புல், டிச. 27 - அக்டாவ் நகருக்கு அருகே கடந்த புதன்கிழமை நிகழ்ந்த அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமான விபத்து தொடர்பான தடயவியல் விசாரணையில் அஜர்பைஜான் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த சட்ட அமலாக்கத் துறையினர் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கஜகஸ்தான் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக அனடோலு ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.
ரஷ்யா மற்றும் அஜர்பைஜானின் சட்ட அமலாக்க துறையினர் தடயவியல் விசாரணையில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கஜகஸ்தான் துணைப் பிரதமர் கனாட் போசம்பாயேவ் அக்டாவ் நகரில் நடைபெற்ற செய்தியாளர் விளக்கமளிப்பின் போது கூறியதாக கஸின்ஃபோர்ம் செய்தி நிறுவனம் கூறியது.
கஜகஸ்தானின் குற்றவியல் சட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்ட நடைமுறைகளின் அடிப்படையில் இரு நாடுகளின் சட்ட அமலாக்கத் துறைகளால் அவ்வாறு செய்ய முடியாது எனக் கூறிய போசம்பாயேவ், எனினும், விபத்து பற்றிய விசாரணையின் பிற அம்சங்களில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.
சம்பவத்தின் பின்னணியில் உள்ள காரணங்களைப் பற்றி கருத்து தெரிவித்த போசும்பாயேவ், இந்த சம்பவத்தின் அதிகாரப்பூர்வ கருத்துகள் எதனையும் பாக்கு அல்லது மாஸ்கோவிலிருந்து அஸ்தானா இன்னும் பெறவில்லை என்று கூறினார்.
பத்திரிகைகளின் யூகங்களும் ஆய்வுகளும் சில அரசாங்க ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டவை. அஜர்பைஜான் சகாக்களுடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம்.
இதுவரை யாரும் எங்களிடம் தங்கள் தரப்பு வாதத்தைச் சொல்லவில்லை. மேலும், ரஷ்யா அல்லது அஜர்பைஜானிடமிருந்து நாங்கள் அதிகாரப்பூர்வ கருத்து எதனையும் பெறவில்லை என்று அவர் மேலும் கூறினார்.
ரஷ்ய ஏவுகணை அமைப்பினால் அந்த விமான விபத்து ஏற்பட்டதாக வெளியான ஊடக அறிக்கைகள் நம்பகத்தன்மையை மூத்த அஜர்பைஜான் அதிகாரிகள் நேற்று முன்தினம் அனடோலுவிடம் உறுதிப்படுத்தினர்.
க்ரோஸ்னி நகரை நெருங்கும் போது, அந்த விமானம் பெண்ட்சிர் ஏவுகணை அமைப்பு மூலம் தாக்கப்பட்டதை தொடக்கக்கட்ட விசாரணையின் முடிவுகள் காட்டுகின்றன அரசாங்க ஆதாரங்களை மேற்கோள்காட்டி அஜர்பைஜான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
கடந்த புதன்கிழமை 67 பேருடன் அஜர்பைஜான் தலைநகர் பாக்குவிலிருந்து ரஷ்ய குடியரசின் செச்சினியாவில் உள்ள க்ரோஸ்னி நகருக்கு பயணித்துக் கொண்டிருந்த அந்த விமானம் காஸ்பியன் கடற்கரையில் அமைந்துள்ள அக்டோவிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் விபத்துக்குள்ளானது.
அந்த எம்ப்ரேர் 190 ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 38 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 29 பேர் காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளனர்.


