NATIONAL

2024 இந்திய சமுதாயத்தின் கல்வி, பொருளாதார வளர்ச்சி ஒரு கண்ணோட்டம்

27 டிசம்பர் 2024, 5:07 AM
2024 இந்திய சமுதாயத்தின் கல்வி, பொருளாதார வளர்ச்சி ஒரு கண்ணோட்டம்

கோலாலம்பூர், டிச 27- 2024 விடைபெறுவதற்கு இன்னும் ஐந்து நாள்களே எஞ்சி இருக்கும் வேளையில், இவ்வாண்டில் நிகழந்த சில முக்கிய சம்பவங்களை நினைவு கூறும் தருணம் இது.

புதிய ஆண்டை வரவேற்பதற்கு முன்னர், உள்நாட்டிலும் உலக அளவிலும் வரிசை பிடித்து நிற்கும் அந்த முக்கிய சம்பவங்களை மீள்பார்வைச் செய்து ஆண்டின் இறுதி தொகுப்பாக வழங்குகிறது.

முதல் தொகுப்பு சமூகவியலை சார்ந்திருப்பதால், 2024 ஆம் ஆண்டில் இந்திய சமுதாயத்தின் கல்வி, பொருளாதார வளர்ச்சிகள் அதில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் மற்றும் மேம்பாடுகள் குறித்த கண்ணோட்டம் தொடக்கமாக இடம்பெறுகின்றது.

ஒரு சமுதாயம் பெற்ற தலைசிறந்த அறிவை மற்றொரு தலைமுறைக்குப் பத்திரமாக கடத்தி, எடுத்து செல்லும் ஒரு கருவி கல்வியாகும்.

அந்தக் கல்வியை வழங்குவதில் நாட்டில் இந்தியர்களின் அடையாளமாக இருக்கும் தமிழ்ப்பள்ளிகள், பல சவால்களுக்கு மத்தியில் சமுதாய வளர்ச்சிக்காக ஆண்டுதோறும் பல்வேறான நட்டவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

அதில், இவ்வாண்டு முழுவதும் அரசாங்கம் மற்றும் பல அரசாங்க சார்பற்ற நிறுவனங்கள் வழியாக கல்வி ரீதியில் பல மாற்றங்கள் நடந்ததாக கூறுகின்றார் சைபர்ஜெயா பல்கலைக்கழகத்தின் சார்புநிலை பேராசிரியர் டத்தோ முனைவர் என்.எஸ் இராஜேந்திரன்.

முக்கிய அம்சமாக, இவ்வாண்டு அக்டோபர் ஆறாம் தேதி மலேசியாவின் 530 வது தமிழ்ப்பள்ளியாக, சுங்கை சிப்புட், HEAWOOD தமிழ்ப்பள்ளி பிரதமரால் திறப்பு விழா கண்டது.

அதற்கு முன்னதாக, சிலாங்கூர், சீபில்டு தோட்டத் தமிழ்ப்பள்ளியின் புகுவிழா வழிபாடு பிப்ரவரியில் பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

புத்ரா ஹைட்ஸ் என்னும் பகுதியில் சுமார் 6.5 ஏக்கர் நிலப்பரப்பில் பலவித வசதிகளுடன் அமைந்துள்ள இப்புதிய கட்டடம் 2024 - 2025 ஆம் ஆண்டு புதிய கல்வித் தவணையில் முறையே செயல்படத் தொடங்க திட்டமிடப்பட்டது.

அதோடு, நாட்டில் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் சீரற்ற கழிவறைகள் மற்றம் சிற்றுண்டி சாலைகளை மேம்படுத்த அரசாங்கம் மேற்கொண்ட முயற்சியில் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் கொண்ட தமிழ்ப்பள்ளிகளும் பயன்பெற்றதாக என்.எஸ். இராஜேந்திரன் கூறினார்.

“ தமிழ்ப்பள்ளிகளின் ஒட்டுமொத்த தொடர் மேம்பாட்டிற்காக அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கான திட்ட வரைவு உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது. அதனை தற்போது மடானி அரசாங்கம் சீராய்வு செய்து மீண்டும் பயன்படுத்துவதற்கான முன்னெடுப்புகளை செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் போது தமிழ்ப்பள்ளிகளின் ஒட்டுமொத்த தொடர் மேம்பாட்டினை உறுதி செய்ய முடியும். அதில் இந்த குறைந்த மாணவர்களை கொண்டுச் செல்வதன் வழி காப்பாற்ற முடியும் என்றும் நம்புகிறோம்” என்றார் அவர்.

இதனிடையே, கடந்த சில ஆண்டுகளில் தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதை மறுக்க முடியாது.

ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக ஆயிரம் மாணவர்கள் குறைவதாக கூறிய என்.எஸ். இராஜேந்திரன், இவ்வாண்டில் மாணவர் எண்ணிக்கை குறைந்துபோன காரணத்தையும் இவ்வாறு சுட்டிக் காட்டினார்.

“இப்போது, 77,000 அல்லது 78,000 மாணவர்கள் மட்டுமே இருக்கின்றனர். ஆகவே, சராசரி ஒர் ஆண்டிற்கு ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்களின் சரிவை நாம் பதிவு செய்து வருகிறோம். இதற்கு மிக முக்கிய காரணமாக மலேசியர்கள் மற்றப் பள்ளிகளில் குறிப்பாக சீனப்பள்ளிகளில் 14,000 மாணவர்கள் பயில்வதாக நம்முடைய புள்ளி விவரங்கள் காட்டுகின்றன” என்று அவர் கூறினார்.

மற்றொரு நிலவரத்தில், மெட்ரிகுலேஷன் மற்றும் அரசாங்க உயர்க்கல்வி கழகங்களில் இந்திய மாணவர்களுக்கான பதிவு மற்றும் ஒதுக்கீடு தொடர்பில் சமுதாயத்தில் கேள்விகளும் எழுவது வழக்கமாக இருந்து வருகின்றது.

தகுதியிருந்தும் விரும்பிய துறைகளில் வாய்ப்புக் கிடைக்காத மாணவர்களின் உயர்கல்வி விவகாரத்தை தாம் நிச்சயம் பிரதமரிடம் கொண்டு செல்வதாக தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் உத்தரவாதம் அளித்திருந்தார்.

கல்வியை அடுத்து, வர்த்தக ரீதியில், இவ்வாண்டும் நிறைய சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் உருவாகியிருக்கும் வேளையில், சமூக வலைத்தளம் மூலம் அது மேம்படுத்தப்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர் பேராசிரியர் முனைவர் முடியரசன் குப்புசாமி தெரிவித்துள்ளார்.

''சிறு கடைகள் உட்பட நிறைய சந்தைப்படுத்துதல் நிறைய நடந்துக் கொண்டிருக்கின்றது. அதற்கு நிறைய வரவேற்புகளும் இருந்துள்ளன.

2024ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக பார்த்தால் இந்தியர்களுக்கு பொருளாதார அடிப்படையில் நிறைய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், அதற்கான ஆதரவு கல்வியில் இருந்து தொடங்கியதால் பொருளாதாரத்தில் வளர்ச்சி நிச்சயமாக உள்ளது'', என்று அவர் கூறினார்.

இதனிடையே, துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் முயற்சியின் கீழ் பொருளாதார அடிப்படையில் பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன

அதோடு, அதிகமான இந்தியர்கள் சொத்துகளை வாங்குவதற்கான வழிகளை 2024ஆம் ஆண்டு ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் முடியரசன் விளக்கினார்.

''நிறைய வேலை வாய்ப்புகள் இருந்ததால் மலேசிய இந்தியர்கள் நிறைய சொத்துக்களை வாங்க தொடங்கினர். முதல் முறையாக வீடு வாங்குவது, முதலீட்டு அடிப்படை சொத்துக்கள் வாங்கியது என்ற தகவல்கள் நம்முடைய பதிவில் உள்ளது.

இந்த அடிப்படையில் பார்த்தால் நம்முடைய சொத்துக்களை வைத்திருக்கும் திறன் 2024ஆம் ஆண்டில் நிறைய நிகழ்ந்துள்ளது'', என்றார் அவர்.

SME Corp என்றழைக்கப்படும், SME CORPORATION MALASIA மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினருக்காக, தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாடு அமைச்சு மேற்கொள்ளவிருக்கும் பல திட்டங்களுக்கு 13 கோடியே 46 லட்சம் ரிங்கிட் ஜனவரியில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஸ்பூமி எனப்படும் இந்திய தொழில்முனைவோர் கடனுதவி திட்டத்தின் கீழ் இந்திய தொழில்முனைவோரை ஊக்குவிக்கும், “ஸ்பூமி கோஸ் பிக்” திட்டத்திற்கு, தெக்குன் நெஷனஸ், 3 கோடி ரிங்கிட் கூடுதல் நிதி ஒதுக்கீட்டை கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்திருந்தது.

இவ்வாண்டு அந்நிதி ஆறு கோடியாக இரட்டிப்பாக்கும் நிலையில் 16 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட ஸ்பூமிக்கு வழங்கப்படும் மிகப்பெரிய தொகை இதுவாகும்.

அதோடு, இந்தியப் பெண் தொழில்முனைவோரின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் ‘பெண்” எனும் புதிய திட்டத்தின் வழி, அமானா இக்தியார் மலேசியா-AIM , கூடுதல் 5 கோடி ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை வழங்கியது.

பிரிவ்ஐ எனப்படும் பெங்க் ரக்யாட் இந்திய தொழில்முனைவோர் நிதியளிப்பு திட்டத்தின் மூலமாக குறு, சிறு, நடுத்தர வியாபாரம் செய்யும் இந்திய தொழில்முனைவோருக்கு பிரேத்தியேகமாக 5 கோடி ரிங்கிட் நிதி ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.