ஜாகர்த்தா, டிச. 27- உலகம் முழுவதும் 230,000 உயிர்களைப் பலி கொண்ட
சுனாமி ஆழிப்பேரலை பேரிடர் நிகழ்ந்து 20 ஆண்டுகள் ஆன நிலையில்
துயரம் நிறைந்த அந்த நினைவு தினத்தை அனுசரிக்கும் வகையில்
அப்பேரிடரில் உயிர்த்தப்பியவர்கள் மற்றும் நேசத்திற்குரியவர்களை
இழந்தவர்கள் கல்லறைகளில் ஒன்று கூடி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
செலுத்தினர்.
கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி ரிக்டர் கருவியில் 9.1 எனப்
பதிவான வலுவான நிலநடுக்கம் இந்தோனேசியாவின் ஆச்சே மாநிலத்தின்
கடல் பகுதியில் ஏற்பட்டது. கடலுக்கு அடியில் ஏற்பட்ட இந்த பூகம்பம்
காரணமாக 17.4 மீட்டர் உயரத்திற்கு எழுந்த அலைகள் இந்தோனேசியா,
தாய்லாந்து, இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் கடலோரப்
பகுதிகளைத் தாக்கின.
இந்த சுனாமி பேரிடரில் இந்தியாவின் தமிழ்நாடு மிகவும் மோசமாக
பாதிக்கப்பட்டது. இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பேரிடரில்
பறிகொடுத்த தங்கள் உறவினர்களுக்காக அம்மாநில மக்கள் சிறப்பு
பிரார்த்தனைகளை நடத்தினர்.
இந்த அழிப்பேரலையில் சிக்கி உயரிழந்த மொத்த மக்களில் பாதிப்பேர்
இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்களாவர். நேற்று முன்தினம்
அனுசரிக்கப்பட்ட இந்த 20வது நினைவு தினத்தின் போது அப்பேரிடரில்
இறந்தவர்களின் கல்லறைகளுக்குச் சென்ற உறவினர்கள் மலர்களை
வைத்து அஞ்சலி செலுத்தியதோடு, ஒருவரை ஒருவர் அரவணைத்து
ஆறுதல் கூறிக் கொண்டனர்.
சுனாமியால் இறந்தவர்கள் ஒரே வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ள
நிலையில் பலரின் உடல்கள் அடையாளம் தெரியாத நிலையிலே அடக்கம்
செய்யப்பட்டுள்ளதால் தங்கள் உறவினர்கள் இங்குதான் அடக்கம் செய்யப்பட்டார்களா எனத் தெரியாத நிலையில் தாங்கள் உள்ளதாக பலர் கூறினர்.
சுனாமி பேரிடரில் மனைவி, பிள்ளைகள், பெற்றோர் மற்றும்
உறவினர்களை தாம் பறிகொடுத்த போதிலும் அவர்களில் ஒருவரின்
உடல்கூட கிடைக்கவில்லை என்று நுர்காலிஸ் வயது (52) என்ற ஆடவர்
கூறினார்.
காலங்கள் கடந்து போகலாம். ஆனால், பிரிவின் துயரம் இன்றுவரை
துரத்திக் கொண்டிருக்கிறது என்ற அவர் வேதனையுடன் தெரிவித்தார்.
இந்த பேரிடரில் பாதிக்கப்பட்ட மற்றொரு நாடான இலங்கையின் காலே
நகரில் அமைக்கப்பட்டுள்ள பேரலையா சுனாமி நினைவு சிலையின் முன்
நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் இரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.


