புதுடில்லி, டிச. 27 - இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று காலமானார். அன்னாருக்கு வயது 92.
புது டில்லி, ஏய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சைப் பலனின்றி மறைந்தார் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.
அன்னாரது இறுதிச்சடங்கு எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதுமை தொடர்பான உடல்நலக் குறைவு காரணமாக இன்று இரவு மருத்துவமனையில் மன்மோகன் சிங் அனுமதிக்கப்பட்டார். டில்லியில் உள்ள தனது வீட்டில் அவர் சுயநினைவை இழந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டுவரப்பட்டார்.
மருத்துவமனையில் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தபோதிலும், இரவு 9.15 மணிக்கு உயிர் பிரிந்ததாக டில்லி ஏய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
இந்தியாவின் முதல் சீக்கிய பிரதமர் என்ற பெருமையைப் பெற்ற மன்மோகன் சிங், 2004 முதல் 2014 வரை இரு தவணைகள் பிரதமராகப் பதவி வகித்தார்.
சங்கோஜ குணம் கொண்டவர் மென்மையாகப் பேசக்கூடியவர் என அறியப்பட்ட மன்மோகன் சிங், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முன்னோடியாக இருந்ததோடு லட்சக்கணக்கானோரை வறுமையிலிருந்து மீட்கவும் உதவினார்.
காங்கிரஸ் கடசித் தலைவராக இருந்த அவா் 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வென்றதையடுத்து பிரதமராக அறிவிக்கப்பட்டாா். 2009-இல் அந்தக் கூட்டணி மீண்டும் வென்றதைண் தொடர்ந்து இரண்டாவது முறையாக அவா் பிரதமரானாா்.
அவருடைய முதல் பதவி காலத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டன. இரண்டாவது பதவி காலத்தில், அனைவருக்கும் கட்டாய கல்வி சட்டம், மானிய விலையில் உணவு தானியங்களை வழங்கும் நோக்கில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன.
கடந்த 1991 முதல் 1996 வரை முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் தலைமையிலான ஆட்சியில், நிதித் துறை அமைச்சராக இவர் சிறப்பாக செயல்பட்டார்.
கல்வியாலும், நிதித் துறை நிர்வாக அனுபவத்தாலும் பொருளாதாரவியல் வல்லுநரான மன்மோகன் சிங், இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையின் தொடக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தார்.
நவீன இந்தியாவின் பொருளாதார சிற்பி என பலரால் போற்றப்படுபவர் மன்மோகன் சிங். பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் பொருளாதார தாரளமயமாக்கும் சீர்திருத்தங்களைச் செய்தார். திட்ட ஆணைய துணைத் தலைவர், ரிசர்வ் வங்கி ஆளுநர் என பல பொறுப்புகளை வகித்துள்ளார்.
மன்மோகன் சிங்கின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் மக்களவைத் தலைவர் ராகுல் காந்தி, மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


