கோலாலம்பூர், டிச. 27 - இங்குள்ள மலாயா பல்கலைக்கழக வளாகத்தில் அண்மையில் பூனைகள் இறந்தது தொடர்பில் விரிவுரையாளர், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விலங்கு உரிமை ஆர்வலர் உட்பட ஏழு நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த டிசம்பர் 21ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட பூனையின் உடல் ஒன்று சமூக ஆர்வலர் ஒருவரால் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பரிசோதனை மற்றும் உடல்கூராய்வு நடவடிக்கைக்காக அது கால்நடை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் காவல்துறை தலைவர் டத்தோ ருஸ்டி முகமது இசா கூறினார்.
உடற்கூராய்வு நாளை நடத்தப்படும். மலாயா பல்கலைக்கழகத்தின் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி அறிவியல் துறையின் வாகன நிறுத்துமிடத்தில் டிசம்பர் 25 ஆம் தேதி கண்டெடுக்கப்பட்ட மற்றொரு பூனையின் உடலும் பரிசோதனை மற்றும் உடற்கூராய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று அவர் நேற்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் முழு விசாரணை நடத்தும்படி விலங்குகள் நல அமைப்பான கிளப் கூச்சிங் மலேசியா முன்னதாக கோரிக்கை விடுத்திருந்தது.
இதன் தொடர்பில் அதிகாரிகள் நடத்தும் விசாரணை குறித்து தாங்கள் கேள்வியெழுப்பவில்லை என்றும் எனினும், நிபுணர்களின் உதவியுடன் வழக்கை மறுபரிசீலனை செய்யப்படும் எனத் தாங்கள் நம்புவதாகவும் அதன் தலைவர் காலிட் ரஷிட் கூறியிருந்தார்.
அந்த பூனைகளை தெருநாய்கள் தாக்குவதை கண்காணிப்பு கேமராவில் இடம் பெற்றுள்ள காட்சிகள் காட்டுவதாக காவல்துறை கடந்த டிசம்பர் 22ஆம் தேதி தெரிவித்திருந்தது.


