கோலாலம்பூர், டிச. 27- சாலைத் தடுப்புச் சோதனையிலிருந்து
தப்புவதற்காக நெடுஞ்சாலையின் எதிர்திசையில் காரைச் செலுத்திய
இருவரை போலீசார் 35 கிலோ மீட்டர் துரத்திச் சென்று வெற்றிகரமாக
மடக்கிப் பிடித்தனர்.
இச்சம்பவம் டாமன்சாரா-பூச்சோங் நெடுஞ்சாலையின் 16வது கிலோ
மீட்டரில் நேற்று காலை 11.32 மணியளவில் நிகழ்ந்ததாக பெட்டாலிங்
ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஷஹாருள்நிசாம் ஜாபர்
கூறினார்.
இந்த துரத்தல் நடவடிக்கையின் போது சந்தேகப்பேர்வழிகள் பயணம்
செய்த புரோட்டோன் சத்ரியா கார் போலீஸ் ரோந்துக் காரையும் மோட்டார்
சைக்கிளில் பயணித்த ஆடவர் ஒருவரையும் மோதியதாக அவர்
தெரிவித்தார்.
சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்த துரத்தல் நாடகத்திற்குப் பிறகு ஜாலான்
பி.ஜே.யு.1ஏ/1 ஆரா டாமன்சாராவில் அக்காரை மடக்கிய போலீசார்
அதிலிருந்த 30 மற்றும் 29 வயதுடைய இரு ஆடவர்களைக் கைது
செய்தனர் என்றார்.
அக்காரில் நடத்தப்பட்டச் சோதனையில் 12.87 கிராம் ஷாபு போதைப்
பொருள் பறிமுதல் செய்யப்பட்டதோடு மின் அதிர்ச்சி அலை வகையைச்
சேர்ந்த து என நம்பப்படும் ஆயுதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டது என அவர்
நேற்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.
முதல் சந்தேகப்பேர்வழியான காரோட்டிக்கு 11 குற்றவியல் பதிவுகளும் 5
போதைப் பொருள் தொடர்பான பதிவுகளும் உள்ளதாகக் கூறிய அவர்,
மற்றொரு சந்தேக நபர் ஒரு குற்றப்பதிவைக் கொண்டுள்ளார் என்றார்.
கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் மேல் நடவடிக்கைக்காக
பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு கொண்டுச்
செல்லப்பட்டனர் என அவர் சொன்னார்.


