காஸா, டிச. 27- காஸா தீபகற்பத்தின் மத்திய பகுதியில் இஸ்ரேலிய
ஆக்கிரமிப்புப் படையினர் நேற்று நடத்திய வான் தாக்குதலில் ஐந்து
ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதாகப் பாலஸ்தீன செய்தி நிறுவனமான
வாஃபா கூறியது.
அல்-அவ்டா மருத்துவமனையின் எதிரே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த
தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றின் ஒளிபரப்பு வேன் மீது இஸ்ரேலியப்
படைகள் குண்டு வீச்சுத் தாக்குதலை நடத்தியதில் அந்த வேனிலிருந்த
ஐந்து ஊடகவியலாளர்களும் உயிரிழந்தனர் என்று மருத்துவ
வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் பத்திரிகையாளரான அய்மான்
அல்-ஹாடியும் ஒருவராவார். தலைப்பிரசவத்திற்காக அந்த
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது மனைவியைக்
காண்பதற்காக அங்கு வந்த அய்மான், அங்கிருந்த சக
பத்திரிகையாளர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த போது இந்த தாக்குதல்
நடத்தப்பட்டது.
கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி காஸா மீதான தாக்குதலை
இஸ்ரேல் தொடங்கியதிலிருந்து இதுவரை 190க்கும் மேற்பட்ட
ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
காஸாவில் நிகழ்ந்து வரும் போரில் இதுவரை 45,361 பேர்
கொல்லப்பட்டுள்ளதோடு மேலும் 107,803 பேர் காயமடைந்துள்ளதாக
மருத்துவ வட்டாரங்கள் கூறின. உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர்
சிறார்கள் மற்றும் பெண்களாவர்.
