கோலாலம்பூர், டிச. 27- பண்டார் தாசேக் செலத்தான் இலகு இரயில்
நிலையத்தில் (எல்.ஆர்.டி.) கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த இரு
கால்பந்தாட்ட ஆதரவு கும்பல்களுக்கிடையிலான மோதல் தொடர்பில்
மேலும் ஆறு சந்தேக நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
இருபது முதல் 24 வயது வரையிலான அந்த அறுவரும் கோலாலம்பூர்
வட்டாரத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு நேற்று
முன்தினம் தொடங்கி ஒரு நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதாக
கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமது ஈசா கூறினார்.
குற்றவியல் சட்டத்தின் 147 மற்றும் 427 பிரிவுகளின் கீழ் நடத்தப்படும்
விசாரணை தொடர்பில் வாக்குமூலம் பெறப்பட்டப் பின்னர் அந்த
அறுவரும் நேற்று விடுவிக்கப்பட்டனர் என்று அவர் தெரிவித்தார்.
இந்த விசாரணை அரசு துணை வழக்கறிஞரின் கவனத்திற்கு கொண்டு
செல்லப்பட்டுள்ளது. எனினும், இதன் தொடர்பில் முடிவெடுப்பதற்கு முன்
விசாரணை அறிக்கையை முழுமைப்படுத்த வேண்டியுள்ளது என அவர்
சொன்னார்.
இச்சம்பவம் தொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட 22
மற்றும் 24 வயதுடைய இரு ஆடவர்களும் போலீஸ் ஜாமீனில் நேற்று
விடுவிக்கப்பட்டனர் என்றார் அவர்.
பண்டார் தாசேக் செலாத்தான் எல்.ஆர்.டி. நிலையத்தில் இரு கால்பந்தாட்ட
ஆதரவு கும்பல்களுக்கிடையே மோதல் நிகழ்வதை சித்தரிக்கும் காணொளி
சமூக ஊடகங்களில் கடந்த 21ஆம் தேதி பரவலாகப் பகிரப்பட்டது.
இருபது முதல் முப்பது பேர் கொண்ட கும்பல் ஒருவரை ஒருவர் குத்திக்
கொண்டும் குப்பைத் தொட்டிகளை வீசிக் கொண்டும் இரயில் கதவுகளை
எட்டி உதைத்தும் களேபரத்தில் ஈடுபடுவதை சித்தரிக்கும் காட்சிகள் அந்த
காணொளியில் பதிவாகியிருந்தன.
இச்சம்பவத்தில் இரயில் கதவுகள் சேதமடைந்த நிலையில் இது குறித்து
பிரசரானா பெர்ஹாட் நிறுவனம் போலீசில் புகார் செய்திருந்தது.


