ஈப்போ, டிச 26: இன்று அதிகாலை மஞ்சுங் அருகே தெற்கு நோக்கிச் செல்லும் மேற்கு கடற்கரை நெடுஞ்சாலையின் (WCE) கிலோமீட்டர் (KM) 212.3 இல் இரண்டு வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டது. அதில் இரண்டு நபர்கள் இறந்த நிலையில் நான்கு பேர் காயமடைந்தனர்.
பலியானவர்கள் நோர் ஃபடிலா முகமட் அஸ்லான் (24) மற்றும் அவரது மகன் (2) என அடையாளம் காணப்பட்டதாக பேராக் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை(ஜேபிபிஎம்) செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் சபரோட்ஸி நோர் அஹ்மட் கூறினார்.
"பெரோடுவா கெலிசாவில் பயணித்த இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது. அதே வாகனத்தில் பயணித்த 24 வயது இளைஞனும் மூன்று வயது சிறுவனும் சிறு காயங்களுக்கு உள்ளாகினர்," என்று அவர் கூறினார்.
மேலும், புரோட்டான் வீரா வகை காரில் பயணித்த இரண்டு ஆண்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன.
அதிகாலை 5.15 மணிக்கு இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் ஆயர் தவார் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட அனைவரும் பொதுமக்களால் மீட்கப்பட்டதாகவும், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக ஶ்ரீ மஞ்சுங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மேல் நடவடிக்கைக்காக சடலங்கள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
– பெர்னாமா


