கோலாலம்பூர், டிச 26 - நிறுவன நிர்வாகிக்குச் சொந்தமான வீட்டிற்குள் கடந்த வாரம் நுழைந்து பல்வேறு பொருட்களை திருடியதன் மூலம் அவருக்கு 170,000 வெள்ளி இழப்பை ஏற்படுத்தியதாக மின் இணைப்பு பணியாளர் ஒருவர் மீது இன்று இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
மாஜிஸ்திரேட் நோரில்யானா ஹனிம் அப்துல் ஹலிம் முன்னிலையில் தமக்கு எதிராக கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை 57 வயதான கோ கோக் ஹின் எனாற அவ்வாடவர் மறுத்து விசாரணை கோரினார்.
முப்பதைந்து வயதான சூய் வெங் வை என்ற அந்த நிர்வாகியின் வீட்டிற்குள் நுழைந்து 100,000 வெள்ளி மதிப்புள்ள நகைகள், ஒரு மலேசிய கடப்பிதழ், 60,000 வெள்ளி மதிப்புள்ள மூன்று சேனல் ரக கைப் பைகள் மற்றும் பத்தாயிரம் வெள்ளி மதிப்புள்ள அமெரிக்க, ஆஸ்திரேலிய டாலர்கள், ஜப்பானிய யென் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்களை திருடியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இதனால் அந்த நிர்வாகிக்கு ஏற்பட்ட மொத்த இழப்பு 173,000 வெள்ளி என மதிப்பிடப்படுகிறது.
கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி மாலை 4.00 மணியளவில் பிரிக்பீல்ட்ஸ் தாமான் டேசாவில் உள்ள ஒரு வீட்டில் இக்குற்றத்தைப் புரிந்ததாக அவ்வாடவருக்கு எதிரான குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 457 இன் கீழ் அவர் மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். மேலும் குற்றத்தில் திருட்டு தொடர்புடையதாக இருந்தால் 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் இரண்டாவது குற்றத்திற்கு அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.


