ஷா ஆலம், டிச. 26 - சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு 2025 ஆண்டு
சிலாங்கூருக்கு வருகை தாருங்கள் பிரச்சாரத்தில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறும் என்று உள்ளூர் அரசு, சுற்றுலா மற்றும் புதிய கிராம மேம்பாட்டிற்கான மாநிலச் செயற்குழு உறுப்பினர் டத்தோ இங் சுய் லிம் தெரிவித்தார்
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் இந்த நிகழ்வுகள் கலாச்சாரத்தை முன்னிலைப்படுத்தும்.
“சுற்றுலாப் பயணிகளுக்கான தனித்துவமான கலாச்சாரக் கூறுகளை காட்சிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். நமது சுற்றுலாத் துறையை மேலும் செம்மைப்படுத்தி வலுப்படுத்த விரும்புகிறோம்.
"கூடுதலாக, ஹரி ராயா ஐடில்ஃபித்ரி போன்ற பிற கொண்டாட்டங்கள் போது குறிப்பிட்ட பிரச்சாரத்திற்கு ஏற்ப அவற்றை இன்னும் தனித்துவமாகவும் மாற்றுவோம்," என்று அவர் கூறினார்.
சீனப் புத்தாண்டுக்காகக் கிள்ளான் மாநகராட்சி, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து கிள்ளானில் உள்ள லோராங் கோபெங்கை ஒரு கலாச்சார இடமாக மேம்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
மேலும், முதல் முறையாக மாநில அளவிலான சீன புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பு, ஜெஞ்ஜாரோமில் உள்ள ஃபோ குவாங் ஷான் டோங் ஜென் புத்த கோவிலில் நடைபெறும்.
"பாரம்பரிய தளத்தில் இந்நிகழ்வை ஏற்பாடு செய்வது இதுவே முதல் முறையாகும். இந்நிகழ்வு பல்வேறு பின்னணிகளை கொண்ட வருகையாளர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களால் அலங்கரிக்கப்படும்" என்று அவர் கூறினார்.


