ஷா ஆலம், டிச. 26 - நவீன விவசாயம் மற்றும் உலகச் சந்தை விரிவாக்கம்
தொடர்பில் நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்வதற்காக சிலாங்கூர் மாநில
விவசாய மேம்பாட்டுக் கழகம் (பி.கே.பி.எஸ்.) சீன நிறுவனத்துடன்
ஒத்துழைப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நோக்கத்தின் அடிப்படையில் சீனாவின் குவாங்ஷி யுஃபெங்
ஃபூட்,ஹெல்த் கம்பெனி லிமிடெட் மற்றும் குவாங்ஷி மெய்லி டிஜிட்டல்
டெக்னோலோஜி கோ. லிம்டெட் ஆகிய நிறுவனங்களுடன் பி.கே.பி.எஸ்.
துணை நிறுவனமான ஏஹ்சான் அக்ரோடெக் சென். பெர்ஹாட் கூட்டு
ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது.
விவசாய தொழிநுட்ப நிபுணத்துவம், டிஜிட்டல் பயிரீடு, வேளாண் உற்பத்தி
பொருள்கள் மற்றும் வெப்பமண்டல பழங்களின் மேம்பாடு மற்றும் சந்தை
படுத்துதல் ஆகிய துறைகளை இந்த ஒத்துழைப்பு உட்படுத்தியுள்ளதாக
பி.கே.பி.எஸ். ஏஹ்சான் அக்ரோடெக் நிறுவனத்தின் தலைமைச்
செயல்முறை அதிகாரி சான் கோக் சோய் கூறினார்.
வேளாண் மற்றும் பயிரீட்டு டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி
வெப்ப மண்டலப் பழங்கள் மற்றும் சின்சாவ் பயிரீடு உள்ளிட்ட
துறைகளில் விவசாயத் தொழில்துறை புரட்சியை ஏற்படுத்துவதை இந்த
ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் சொன்னார்.
இந்த சீன நிறுவனங்கள் உலகளாவிய நிலையில் விவசாயம் மற்றும்
சந்தை துறையில் பரந்த அனுபவத்தைக் கொண்டுள்ளன. இந்த
ஒத்துழைப்பின் வாயிலாக தென்கிழக்காசியாவில் நமது வர்த்தகத்தை
விரிவாக்கம் செய்வதற்குரிய வாய்ப்பு கிட்டும் என பெரிதும் நம்புகிறோம்
என்று அவர் குறிப்பிட்டார்.
இங்குள்ள விஸ்மா பி.கே.பி.எஸ்.சில் இன்று காலை நடைபெற்ற ஒப்பந்தம்
கையெழுத்திடும் சடங்கிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் இதனைத்
தெரிவித்தார்.
உணவு இறக்குமதியை பெரிதும் சார்ந்திருப்பதை குறைக்கும் வகையிலும்
விவசாயிகளின் வருமானத்தை பெருக்கும் நோக்கிலும் நவீன மற்றும்
உயர் மதிப்பிலான விவசாயத்தில் சிலாங்கூர் கவனம் செலுத்துகிறது
என்று விவசாயத் துறைக்கான ஆட்சிக்கு உறுப்பினர் டத்தோ இஷாம்
ஹஷிம் முன்னதாக கூறியிருந்தார்.


