குவாந்தான், டிச. 26 - லிப்பிஸ் மாவட்டத்தில் வெள்ள நிலைமை
முழுமையாக சீரடைந்தது. இதனைத் தொடர்ந்து 28 குடும்பங்களைச்
சேர்ந்த 89 பேர் தங்கியிருந்த இரு தற்காலிக வெள்ள நிவாரண
மையங்கள் இன்று பிற்பகலில் மூடப்பட்டன.
குபோர் கூலிட் தேசிய பள்ளி மற்றும் கம்போங் பாத்தேக் பள்ளிவாசலில்
அடைக்கலம் நாடியிருந்த அவர்கள் அனைவரும் இன்று பிற்பகல் 12.20
மணிக்கு வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டதாக லிப்பிஸ் மாவட்ட பேரிடர்
மேலாண்மை செயலகம் கூறியது.
வானிலை தெளிவாக இருந்த போதிலும் தற்போதைய வடகிழக்கு
பருவமழையைக் கருத்தில் கொண்டு வெள்ளம் அபாயம் உள்ள குறிப்பாக,
தாழ்வானப் பகுதிகளில் வசிப்பவர்கள் எந்நேரமும் விழிப்புடன் இருக்கும்
அதே வேளையில் அதிகாரிகளின் உத்தரவுகளைப் பின்பற்றி
நடக்கும்படியும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அச்செயலகம் அறிக்கை
ஒன்றில் குறிப்பிட்டது.
நேற்று, ரவுப் ஆறு பெருக்கெடுத்த காரணத்தால் லிப்பிஸ் பகுதியின்
பல்வேறு இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக
அப்பகுதி மக்கள் தற்காலிக நிவாரண மையங்களில் அடைக்கலம் நாடினர்.
ரவுப்பில் ஏற்பட்ட வெள்ளம் இன்று காலை முழுமையாக வடிந்ததைத்
தொடர்ந்து தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியிருந்தவர்கள் இன்று
காலை 8.00 மணியளவில் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.


