புத்ராஜெயா, டிச. 26 - மொசாம்பிக் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள வன்செயல்களில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று விஸ்மா புத்ரா கூறியுள்ளது.
தலைநகர் மாபுடோ உள்ளிட்ட நகர்ப்புறங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த கலவரம் அந்நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளது.
தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள மலேசிய தூதரகம், மொசாம்பிக்கில் வசிக்கும் 20 மலேசியர்களுடன் அங்குள்ள கெளரவ தூதரகத்தின் மூலம் தொடர்பைப் பேணி வருவதாக வெளியுறவு அமைச்சு இன்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
தற்போதைய சூழ்நிலையால் அங்குள்ள மலேசியர்கள் யாரும் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும், அந்நாட்டின் நிலவரங்களை தூதரகம் மிக அணுக்கமாக கண்காணித்து வருகிறது என்று விஸ்மா புத்ரா கூறியது.
கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற சர்ச்சைக்குரிய தேர்தலுடன் தொடர்புடைய உள்நாட்டு கலவரம் தொடரும் நிலையில் நேற்று மாபுடோவில் நிகழ்ந்த சிறை வன்செயலில் 33 பேர் கொல்லப்பட்டதோடு மேலும்15 பேர் காயமடைந்தனர்.
தேர்தலில் ஆளும் கட்சியான ஃப்ரெலிமோவின் வெற்றியை மொசாம்பிக் உச்ச நீதிமன்றம் கடந்த திங்களன்று உறுதி செய்ததைத் தொடர்ந்து வாக்கு மோசடி நிகழ்ந்ததாகக் குற்றம் சாட்டி எதிர்க்கட்சிகள் மற்றும் ஆதரவாளர்கள் நாடு தழுவிய ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர்.
மொசாம்பிக்கிற்கு அவசரமாக பயணம் செய்ய வேண்டிய அவசியம் இல்லாத மலேசியர்கள் தங்கள் பயணத் திட்டங்களை ஒத்திவைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றுவெளியுறவு அமைச்சு மேலும். கூறியது.
வெளிநாட்டில் உள்ள மலேசியர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதில் வெளியுறவு அமைச்சுஉறுதியுடன் உள்ளதோடு தேவையான சமீபத்திய நிலவரங்களையும் வழங்கும் என்று அது கூறியது.
உதவி அல்லது கூடுதல் தகவலுக்கு மலேசியர்கள் பிரிட்டோரியாவில் உள்ள மலேசிய தூதரகத்தை எண். 1007, பிரான்சிஸ் பார்ட் ஸ்ட்ரீட், ஆர்காடியா, பிரிட்டோரியா 0083 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம், +27 (12) 342 5990 என்ற எண்களில் அல்லது mwpretoria@kln.gov.my என்ற மின்னஞ்சல் வழி தொடர்பு கொள்ளலாம் .


