ஷா ஆலம், டிச. 26 - ஹோப் ஆன்-ஹோப் ஆஃப் (ஹோஹோ) எனப்படும்
இரட்டை மாடி சுற்றுலா பஸ் சேவையை எதிர்காலத்தில் அனைத்து
ஊராட்சி மன்றப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்த டூரிசம் சிலாங்கூர்
திட்டமிட்டுள்ளது.
கடந்தாண்டு சிப்பாங் வட்டாரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டத்திற்கு
கிடைத்த அமோக வரவேற்பின் காரணமாக இந்த விரிவாக்கத் திட்டம்
முன்னெடுக்கப்படுவதாக டூரிசம் சிலாங்கூர் தலைமை செயல்முறை
அதிகாரி அஸ்ருள் ஷா முகமது கூறினார்.
2025 சிலாங்கூருக்கு வருகை தாருங்கள் இயக்கத்தை முன்னிட்டு பல்வேறு
ஒருங்கமைப்புகளையும் கவர்ச்சிகரமான சுற்றுலா இடங்களையும்
கொண்டுள்ள கிள்ளான் அரச மாநகர் மன்றத்துடன் நாங்கள் ஒத்துழைப்பை
ஏற்படுத்தியுள்ளோம்.
உணவு வகைகள், வரலாற்றுப்பூர்வ கட்டிடங்கள், பேரங்காடிகள், சதுப்பு
நிலப் பகுதிகள் நிறைந்த சுற்றுலா மையமாக கிள்ளான் விளங்குகிறது.
இங்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையை கருத்தில் கொண்டு
சிப்பாங்கிற்கு அடுத்து கிள்ளானில் இந்த ஹோஹோ இரட்டை மாடி
சுற்றுலா பஸ் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளோம் என அவர்
குறிப்பிட்டார்.
சிப்பாங்கில் கடந்தாண்டு ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த
கூரையில்லா இரட்டை மாடித் திட்டம் சுற்றுலா பயணிகள் மத்தியில்
வரவேற்பை பெற்றுள்ளது. இங்குள்ள சுற்றுலா மையங்கள் குறிப்பாக
மூன்று மாடி உயரத்தில் உருவாக்கப்பட்டுள்ள டிராகன் ஃபுருட் பழ
வடிவத்தை காண்பதற்குரிய வாய்ப்பும் அவர்களுக்கு கிட்டும் என்றார்
அவர்.
பத்து முக்கிய சுற்றுலா மையங்களை உள்ளடக்கிய இந்த இரட்டை மாடிச்
சேவை கடந்தாண்டு ஆரம்பிக்கப்பட்டது முதல் இதுவரை சுமார் 1,500
சுற்றுப்பயணிகள் பயன்படுத்தியுள்ளனர் என்று அவர் சொன்னார்.
2025 சிலாங்கூருக்கு வருகை தாருங்கள் இயக்கத்தை முன்னிட்டு இந்த
இரட்டை மாடி பஸ் சேவை அடுத்தாண்டு கிள்ளானுக்கும்
விரிவுபடுத்தப்படவிருக்கிறது.. ஆண்டு இறுதி வரை இந்த சேவை
மேற்கொள்ளப்படும் என அவர் கூறினார்.


