ஜாகர்த்தா, டிச. 26 - இவ்வாண்டு கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு நாடு
முழுவதும் உள்ள 15,807 கைதிகளுக்கு சிறப்பு தண்டனைக் குறைப்பை
குடிநுழைவு மற்றும் சீர்திருத்த அமைச்சு அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் 15,691 கைதிகளின் தண்டனை காலம்
குறைக்கப்பட்டுள்ள வேளையில் எஞ்சிய 116 கைதிகள் உடனடியாக
விடுவிக்கப்பட்டதாக அதன் அமைச்சர் அகுஸ் அன்ட்ரியாத்தோ கூறினார்.
மேலும், சட்ட முரண்பாட்டுச் சிக்கலில் உள்ள 166 சிறார்களின் தண்டனை
காலம் குறைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் மூன்று சிறார்கள்
உடனடியாக விடுவிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
நன்னடத்தை, சட்டத்தை மதித்து நடப்பது, சீர்திருத்த த் திட்டங்களில்
தீவிர பங்கேற்பு மற்றும் பிறருக்கு பாதிப்பின்றி இருப்பது ஆகிய
காரணங்களின் அடிப்படையில் அந்த சிறார்களுக்கு பரிசாக தண்டனைக்
குறைப்பு மற்றும் விடுவிப்பு வழங்கப்படுகிறது.
சீர்திருத்த அமைப்ப முறை பழிவாங்கும் நடவடிக்கையாக மட்டும்
பார்க்கப்படவில்லை. மாறாக, மறுவாழ்வுக்கும் முன்னுரிமை அளிக்கிறது.
கைதிகள் தங்கள் தவறுகளை உணரவும் மனம் திருந்தவும் உதவுகிறது
என்று அவர் சொன்னார்.
வட சுமத்ரா மாநிலத்தில் 3,196 கைதிகள் கிறிஸ்துமஸ் சிறப்பு பொது
மன்னிப்பைப் பெற்றனர். கிழக்கு நுசா தெங்காரா மற்றும் பாப்புவாவில்
முறையே 1,894 மற்றும் 1,447 கைதிகளுக்கு பொது மன்னிப்பு
வழங்கப்பட்டது.
வட சுமத்ரா மற்றும் மேற்கு பாப்புவாவில் தலா 23 சிறார்கள் இந்த பொது
மன்னிப்பை பெற்றனர். இதர மாநிலங்களைக் காட்டிலும் இங்குதான்
அதிகமான சிறார்கள் இந்த தண்டனைக் குறைப்பை பெற்றுள்ளனர்.


