NATIONAL

எம்.எச்.370 தேடுதல் முயற்சி பலன் தந்தால் ஒத்துழைப்பு வழங்க அரசாங்கம் தயார்- அன்வார்

26 டிசம்பர் 2024, 3:10 AM
எம்.எச்.370 தேடுதல் முயற்சி பலன் தந்தால் ஒத்துழைப்பு வழங்க அரசாங்கம் தயார்- அன்வார்

கோலாலம்பூர், டிச. 26 - காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ்

எம்.எச்.370 விமானத்தை தேடும் பணி பலன் தரும் பட்சத்தில் அந்த

முயற்சிக்கு முழு ஆதரவு வழங்க மடாணி அரசாங்கம் தயாராக உள்ளதாக

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

அந்த விமானத்தைத் தேடுவதற்கான அவசியத்தை அரசாங்கம்

சமநிலைப்படுத்த வேண்டும். அதே சமயம் மக்களின் வரிப்பணம்

நியாயமான முறையில் செலவிடப்படுவதையும் அது உறுதி செய்ய

வேண்டும் என்று அவர் சொன்னார்.

பத்தாண்டுகளுக்கு முன்னர் அந்த விமானம் ராடாரிலிருந்து மறைந்தப்

பின்னர் பல கேள்விகளுக்கு இன்னும் விடை காணப்படாமலிருப்பதாக

அவர் தெரிவித்தார்.

அந்த கேள்விகளுக்கான விடையை அந்த விமானத்தில் இருந்தவர்களின்

குடும்பத்தினர் மற்றும் வாரிசகள் மட்டுமல்ல, பொது மக்களும் அறிந்து

கொள்வதற்கு உரிமை உள்ளது. ஆகவே. நீண்ட கால எதிர்பார்ப்புகளுக்கு

உரிய பலனை தரும் பட்சத்தில் இந்த தேடுதல் முயற்சிக்கு அரசாங்கம்

முழு ஆதரவு வழங்கத் தயாராக உள்ளது என்று அவர் தனது பேஸ்புக்

பதிவில் குறிப்பிட்டார்.

எம்.எச்.370 விமானத்தைக் கண்டு பிடிக்கும் முயற்சியைத் தொடர ஓஷியன்

இன்பினிட்டி நிறுவனம் வழங்கிய பரிந்துரையை அமைச்சரவை கடந்த

டிசம்பர் 13ஆம் தேதி கொள்கையளவில் ஏற்றுக் கொண்டதாகப்

போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கடந்த வெள்ளிக்கிழமை

கூறியிருந்தார்.

இந்த கடலடித் தேடும் முயற்சி தென் சீனக்கடலில் 15,000 சதுர கிலோ

மீட்டர் புதிய பகுதியை மையமிட்டிருக்கும் என்று அவர் சொன்னார்.

இந்த தேடுதல் நடவடிக்கை “கண்டுபிடிக்கப்படாவிட்டால் கட்டணம்

இல்லை“ என்ற கோட்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.

அதாவது விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்படாத பட்சத்தில்

அந்நிறுவனத்திற்கு கட்டணம் வழங்கப்படாது என அவர்

தெளிவுபடுத்தினார்.

கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி 239 பயணிகளுடன்

கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங் நோக்கிச் சென்று கொண்டிருந்த

எம்.எச்.370 விமானம் பாதி வழியில் மாயமானது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.