காஸா, டிச. 26 - காஸா தீபகற்பத்தில் குறிப்பாக, வடபகுதியில்
மருத்துவமனை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் தொடர்ந்து
தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அப்பகுதிக்கு
உடனடியாக உதவிப் பொருள்களை அனுப்ப வேண்டியதன் அவசியத்தை
ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) அவசரகால உதவி அலுவலகம் மீண்டும்
வலியுறுத்தியுள்ளது.
மிகவும் அத்தியாவசியமாகத் தேவைப்படும் உணவு மற்றும் குடிநீரை
வலியுறுத்தி அந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக ஐ.நா.வின்
மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் கூறியது.
காஸாவின் வட பகுதியில் உள்ள மருத்துவமனையில் குழந்தைகளுக்கு
தீவிர சிகிச்சை அளிப்பதற்கு மூன்று வெண்டிலேட்டர்கள் மட்டுமே
உள்ளதாக ஐ.நா.வின் சிறார் நிதியகம் (யுனிசெஃப்) தெரிவித்தது.
அந்த பிரதேசம் முழுவதும் இஸ்ரேலியப் படைகளால்
ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக ஒருங்கிணைப்பு அலுவலகம் குறிப்பிட்டது.
இந்தோனேசிய மருத்துவமனையைச் சுற்றி ஹமாஸ் அமைப்பினருக்கு
எதிராக இஸ்ரேலியப் படைகள் நடத்தி வரும் தாக்குதல்கள் காரணமாக
கமால் அத்வான் மருத்துவமனை மற்றும் இந்தோனேசிய மருத்துவமனை
வளாகத்தில் கடந்த ஞாயிறு முதல் நிலைமை மோசமடைந்துள்ளதாக
கூறப்படுகிறது.
மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு கடந்த டிசம்பர் 1ஆம் தேதி
முதல் 52 முயற்சிகளை ஐ.நா. மேற்கொண்ட நிலையில் அவற்றில் 48
முயற்சிகளை இஸ்ரேல் தடுத்து விட்டது.


