குவாந்தான், டிச. 25- சமூக ஊடகம் மூலம் செய்யப்பட்ட பகுதி நேர வேலை வாய்ப்பு விளம்பரத்தை நம்பி 38 வயது இல்லத்தரசி 147, 753 வெள்ளியை இழந்தார்.
பெராவைச் சேர்ந்த அப்பெண் கடந்த டிசம்பர் மாதம் டெலிகிராம் செயலியில் வெளிவந்த அதிக லாபம் தரும் ''கைவினைப் பொருள் 049'' என்ற குழுவிடன் தொடர்பான பகுதி நேர வேலை வாய்ப்பு விளம்பரத்தால் ஈர்க்கப்பட்டதாக பகாங் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ யஹாயா ஓத்மான் கூறினார்.
ஒவ்வொரு பணியையும் செய்ய பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு இணைப்பு வழங்கப்பட்டது. இருப்பினும் தவறுகள் ஏற்பட்டதால் அவ்வழிமுறையை மீண்டும்-மீண்டும் செய்யும்படி பெண்ணுக்கு உத்தரவிடப்பட்டது.
இதற்கிடையில், அந்த இணைப்பை மீண்டும் பெறுவதற்காக அப்பெண் சந்தேக நபரின் ஒன்பது வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு 28 பரிவரத்தனைகள் மூலம் பணம் செலுத்தியுள்ளார்.
அப்பெண் 200,000 வெள்ளியை கமிஷனாக பெற்றதாக கூறப்பட்டது. எனினும் அப்பணத்தை மீட்க இயலாத நிலையில் தான் ஏமாற்றப்பட்டதை பாதிக்கப்பட்டவர் உணரத் தொடங்கினார். அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் அவர் தனது சொந்த சேமிப்பைப் பயன்படுத்தியுள்ளார் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.


