ஷா ஆலம், டிச. 25- இன்று நாடு முழுவதும் உள்ள கிறிஸ்துவ அன்பர்கள் கிறிஸ்துமஸ் தினத்தை வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இந்த பெருநாளை முன்னிட்டு சிலாங்கூர் அரசு கடந்த டிசம்பர் 14ஆம் தேதி மாநில நிலையிலான பொது உபசரிப்பை சுபாங் ஜெயா. பண்டார் சன்வே சதுக்கத்தில் நடத்தியது.
மாலை 6.30 மணி தொடங்கி இரவு 10.30 மணி வரை நடைபெற்ற இந்த விழாவுக்கு மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமை தாங்கினார்.
இந்த பொது உபசரிப்பில் ஊராட்சி மன்றம் மற்றும் சுற்றுலாத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இங் சுயி லிம், கிராம மேம்பாடு மற்றும் ஒற்றுமைத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ரிஸாம் இஸ்மாயில், சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் மிஷல் இங் மேய் ஸீ மற்றும் மாநிலத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு அறுசுவை விருந்து வழங்கப்பட்டதோடு, கண்களுக்கும் செவிகளுக்கும் இனிமை தரும் வகையில் பல்வேறு ஆடல், பாடல் நிகழ்வுகளும் படைக்கப்பட்டன.
மேலும், இந்த உபசரிப்பு நிகழ்வின் சிறப்பு அங்கமாக கிறிஸ்துவ வழிபாட்டுத் தலங்களுக்கு 465,200 வெள்ளி மானியத்தை மந்திரி பெசார் வழங்கினார்.
இந்த பெருநாளைக் வரவேற்கும் வகையில் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில் உள்ள பல பேரங்காடிகளில் கிறிஸ்துமஸ் மரங்கள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.


