நியூயார்க், டிச. 25- காஸா பகுதியில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள் ஒவ்வொரு மணி நேரமும் ஒரு குழந்தையைக் கொல்வதாக பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண மற்றும் பணி நிறுவனத்தை மேற்கோள் காட்டி பாலஸ்தீன செய்தி நிறுவனம் (வாஃபா) செய்தி வெளியிட்டுள்ளது.
காஸா குழந்தைகளுக்கு பாதுகாப்பான இடம் இல்லை. யுத்தம் தொடங்கியதிலிருந்து காஸாவில் 14,500 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (யுனிசெஃப்) நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியது.
ஒவ்வொரு மணி நேரமும் ஒரு குழந்தை கொல்லப்படுகிறது. இது வெறும் எண் அல்ல. ஒரு உயிரின் குறுகிய கால வாழ்க்கை என்று அது குறிப்பிட்டது.
காஸா பகுதியில் குழந்தைகளைக் கொல்வதை நியாயப்படுத்துவதற்கு எந்த காரணமும் இல்லை. உயிர் பிழைத்த அனைத்து குழந்தைகளும் உடல் மற்றும் உளவியல் ரீதியாக வடுக்களை அனுபவித்துள்ளனர். என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியது.
காஸாவில் உள்ள சிறுவர்களும் சிறுமிகளும் இடிபாடுகளுக்குள் தேடுவதில் தங்கள் நேரத்தை செலவிடுவதால் அவர்களுக்கு முறையான கல்வி கிடைக்கவில்லை.
இந்தக் குழந்தைகளுக்கான நேரம் கடந்து கொண்டிருக்கிறது. அவர்கள் தங்கள் வாழ்க்கையையும் தங்கள் எதிர்காலத்தையும் நம்பிக்கையையும் தொலைத்து விட்டார்கள் அது மேலும் தெரிவித்தது.
காஸா பகுதியிலுள்ள குழந்தைகள் ஒவ்வொரு நாளும் சோகத்தையும் அதிர்ச்சியையும் எதிர்கொள்கின்றனர் என்று பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி நிறுவனம் கடந்த ஜூலை மாதம் கூறியிருந்தது.


