புத்ராஜெயா, டிச. 25- நாட்டில் கடந்தாண்டு 57 லட்சத்து 40 ஆயிரம் புதிய பட்டதாரிகள் உருவாகியுள்ளனர். இது அதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 4.2 விழுக்காடு அதிகமாகும். பட்டம் பெற்றவர்களில் மூன்றில் இரு மடங்கிற்கும் அதிகமானவர்கள் திறன் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று மலேசிய புள்ளிவிபரத்து துறை கூறியது.
கடந்தாண்டு முழுவதும் நிலவிய பொருளாதார மற்றும் ஆள்பலச் சந்தையின் நேர்மறையான நிலை பட்டதாரிகளின் எண்ணிக்கையை 57 லட்சத்து 40 ஆயிரம் பேராக உயர்வு காண்பதற்கு உதவியதாக புள்ளிவிபரத் துறையின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் முகமது உஸிர் மாஹிடின் தெரிவித்தார்.
நாட்டிலுள்ள 15 வயதுக்கும் மேற்பட்ட குடிமக்கள் எண்ணிக்கையில் இவர்கள் 22.3 விழுக்காட்டைப் பிரதிபலிக்கின்றனர் என்று நேற்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டார்.
கடந்தாண்டு பட்டம் பெற்றவர்களில் 49 லட்சத்து 20 ஆயிரம் பேர் ஆள்பலத் துறையில் துடிப்புமிக்க பட்டதாரிகளாக விளங்குகின்றனர். பட்டதாரி மனித வள பங்கேற்பு விகிதாசாரத்தில் அவர்கள் 85.7 விழுக்காட்டு பங்களிப்பை வழங்கியுள்ளனர் என்று அவர் மேலும் சொன்னார்.
கடந்தாண்டு வேலை செய்யும் பட்டதாரிகளின் எண்ணிக்கை 4.9 விழுக்காடு அதிகரித்து 47 லட்சத்து 60 ஆயிரம் பேராக ஆனது. கடந்த 2022ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 45 லட்சத்து 30 ஆயிரம் பேராக மட்டுமே இருந்தது. இந்த மேம்பாடு மலேசிய ஆள்பலச் சந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப அமைந்துள்ளது என அவர் கூறினார்.
பட்டதாரிகளில் ஏறக்குறைய மூன்றில் இரு மடங்கினர் அல்லது 67.6 விழுக்காட்டினர் (32.1 லட்சம் பேர்) திறன் சார்ந்த துறைகளில் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் 57.4 விழுக்காட்டினர் நிபுணத்துவத் துறையிலும் 24.2 விழுக்காட்டினர் பொறியியல் மற்றும் கூட்டு நிபுணத்துவ துறையிலும் 18.5 விழுக்காட்டினர் நிர்வாகத் துறையிலும் பணியாற்றி வருகின்றனர் என்று உஸிர் தெரிவித்தார்.


