கோலாலம்பூர், டிச. 25- இனங்களுக்கிடையே பிரிவினை அல்லது முரண்பாடுகளை ஏற்படுத்தும் எந்த முயற்சியும் தவிர்க்கப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
வெற்றிகரமான மற்றும் பிரசித்தி பெற்ற தேசிய அடையாளத்தை உருவாக்கும் முயற்சியில் ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பது அவசியம் என்று அவர் சொன்னார். இன்று கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு தனது பேஸ்புக் வாயிலாக வழங்கிய வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைத் தெரிவித்தார்.
ஒரு சில தரப்பினரின் சுய நலன்களுக்காக மலேசியாவின் வளர்ச்சியை முடக்கவோ, திசை மாற்றவோ கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
உலகளாவிய நீதியின் மதிப்புக்கூறுகள் மற்றும் கோட்பாடுகள் நிலை நிறுத்தப்பட வேண்டும். நாட்டின் ஸ்தாபக தந்தைகளின் நம்பிக்கைகள் பிரதிபலிக்கப்பட வேண்டும். கண்ணியமிக்க எதிர்காலத்தை வடிவமைப்பதில் அவர்கள் முன்னிலையில் இருந்துள்ளனர் என்று அவர் சொன்னார்.
நல்லிணக்கம் மற்றும் அமைதிக்காக பாடுபடும் எந்த நாட்டிலும் இன மற்றும் கலாச்சார வேறுபாடுகள் செழுமைக்கான வழிமுறை என்பதை நான் எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளேன் என்று அவர் குறிப்பிட்டார்.
இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடும் அனைத்து கிறிஸ்துவர்களுக்கும் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
கிறிஸ்துமஸ் பண்டிகை மலேசிய உள்பட உலகம் முழுவதும் ஒவ்வொரோண்டும் டிசம்பர் 25ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அனைத்து கிறிஸ்துவ அன்பர்களுக்கும் எனது இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.
நேசத்துக்குரியவர்களுடன் நேரத்தை மகிழ்ச்சியுடன் செலவிடுவதற்கும் அன்பை பகிர்ந்து கொள்வதற்கும் இந்த இனிய தருணத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று அவர் அப்பதிவில் கேட்டுக் கொண்டார்.


