கோலாலம்பூர், டிச. 24 - சிறார் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்கள் (சி.எஸ்.ஏ.எம்.) சம்பந்தப்பட்ட இணைய பாலியல் குற்றங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் முதியவர் உள்பட 13 பேர் 'ஓப் பெடோ' நடவடிக்கையில் நேற்று கைது செய்யப்பட்ட னர்.
சிலாங்கூர், கோலாலம்பூர், பினாங்கு, பேராக், ஜோகூர், திரங்கானு ஆகிய ஆறு மாநிலங்களில் மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்துடன் (எம்.சி.எம்.சி.) இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது 74 வயது சந்தேக நபரும் மேலும் 12 பேரும் கைது செய்யப்பட்டதாக தேசிய போலீஸ் படைத்தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசேன் தெரிவித்தார்.
இரவு 9.00 மணிக்கு நடைபெற்ற இச்சோதனை நடவடிக்கையில் பாலியல், பெண்கள் மற்றும் சிறார் விசாரணைப் பிரிவு, தொழில்நுட்ப உதவிப் பிரிவு, புக்கிட் அமான் காவல் துறையின் தடயவியல் ஆய்வகம் மற்றும் எம்.சி.எம்.சி. அதிகாரிகள் அடங்கிய 18 குழுக்கள் ஆறு மாநிலங்களில் உள்ள 18 வளாகங்களை சோதனையிட்டதாக அவர் தெரிவித்தார்.
அந்த 13 சந்தேக நபர்களுக்கு சொந்தமான பல்வேறு தகவல் தொடர்பு தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் உபகரணங்களை சோதனை செய்ததில் சுமார் 40,000 சி.எஸ்.ஏ.எம் மற்றும் வயது வந்தோருக்கான ஆபாச பொருட்கள் இருப்பது தெரியவந்தது என்று அவர் இன்று பெர்னாமா தொடர்பு கொண்டபோது கூறினார்.
40,000 சி.எஸ்.ஏ.எம்.கள் தவிர, ஏழு கணினிகள், 11 கைப்பேசிகள், ஒன்பது ரூட்டர்கள், ஏழு மோடம்கள். ஒரு மடிக்கணினி, , டிவிடி மற்றும் வன்பொருள் ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றினர்.
சந்தேக நபர்கள் அனைவரும் 2017ஆம் ஆண்டு சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டத்தின் 10 வது பிரிவு மற்றும் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 292 இன் கீழ் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 13 சந்தேக நபர்களில் ஐந்து பேர் நான்கு நாட்களுக்கும் நால்வர் மூன்று நாட்களுக்கும் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இருவர் ஒரு நாள் தடுத்து வைக்கப்படுவார்கள். மற்ற இருவர் போலீஸ் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர் என்று ரஸாருடின் குறிப்பிட்டார்.


