அலோர் காஜா, டிச. 24- வடக்கு- தெற்கு நெடுஞ்சாலையின் 204வது கிலோ
மீட்டரில் தெற்கு நோக்கிச் செல்லும் தடத்தில் நேற்றிரவு நிகழ்ந்த கோர
சாலை விபத்தில் பலியான எழுவரில் ஐவரின் உடல்கள் அடையாளம்
காணப்பட்டன.
டோயோட்டா எஸ்திமா பல்நோக்கு வாகனத்தின் (எம்.பி.வி.) ஓட்டுநரான
கைருள் இக்வான் மசுப்பி (வயது 32) அதன் பயணிகளான பாட்ஸ்லினா
ரம்லி, ரம்லி அப்துல் வஹாப் (வயது 66) முகமது உமர் கைருள் இக்வான்
(வயது 2), சுற்றுலா பேருந்து ஓட்டுநர் நோரிஸ்நின் காமிட் (வயது 56)
ஆகியோரே இந்த விபத்தில் உயிரிழந்தவர்களாவர் என்று அலோர் காஜா
மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் அஸ்ஹாரி அபு சமா
கூறினார்.
அந்த எம்.பி.வி. வாகனத்தின் பயணி மற்றும் சுற்றுலா பேருந்தின்
பயணியின் உடல் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று அவர்
தெரிவித்தார்.
இந்த விபத்தில் சுற்றுலா பேருந்து, இரு லோரிகள், ஒரு எம்.பி.வி
வாகனம் மற்றும் ஒரு கார் ஆகியவை சம்பந்தப்பட்டிருந்தன.
வடக்கிலிருந்து தெற்கு நோக்கிச் சென்று கொண்டிருந்த லோரி ஒன்றின்
டயர் திடீரென கழன்று சாலையின் மையத் தடத்தில் விழுந்ததால் இந்த
விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
27 பயணிகளுடன் அதே தடத்தில் வந்து கொண்டிருந்த சுற்றுலா பேருந்து
அந்த டயரை மோதியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து
சாலையின் மையத் தடுப்பை உடைத்துக் கொண்டு எதிர்த்தடத்தில்
நுழைந்து வடக்கு நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு லோரி மற்றும்
எம்.பி.வி. வாகனத்துடன் மோதியது என்று அவர் அறிக்கை ஒன்றில்
கூறினார்.
இந்த விபத்தின் காரணமாக எம்.பி.வாகனத்தின் ஐந்து பயணிகள், சுற்றுலா
பேருந்தின் ஓட்டுநர் மற்றும் பயணி உள்ளிட்ட எழுவர் சம்பவ
இடத்திலேயே உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டார்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் பரிசோதனைக்காக மலாக்கா
மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட வேளையில் இவ்விபத்து
தொடர்பில் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டத்தின் 41(1)வது
பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.


