அலோர் காஜா, டிச. 24- வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 204வது கிலோ
மீட்டரில் வடக்கு நோக்கிச் செல்லும் தடத்தில் நேற்றிரவு நிகழ்ந்த மூன்று
வாகனங்கள் சம்பந்தப்பட்ட கோர சாலை விபத்தில் எழுவர்
உயிரிழந்ததோடு மேலும் 33 பேர் காயமடைந்தனர்.
ஆயர் குரோ ஓய்வுப் பகுதிக்கு அருகே நிகழ்ந்த இந்த விபத்தில் ஒரு
சுற்றுலா பேருந்து, டிரெய்லர் லோரி மற்றும் டோயோட்டா எஸ்திமா
பல்நோக்கு வாகனம் ஆகியவை சம்பந்தப்பட்டிருந்ததாக மலாக்கா மாநில
தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் முகமது பிசார் அஜிஸ்
கூறினார்.
இந்த கோர விபத்தில் மூன்று ஆடவர்கள், மூன்று பெண்கள் மற்றும் ஒரு
பெண் குழந்தை பலியானது தொடக்க கட்ட விசாரணையில் தெரிய
வந்துள்ளதாக அவர் சொன்னார்.
டோயோட்டா எஸ்திமா வாகனத்தில் பயணித்த இரு ஆடவர்கள், மூன்று
பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உள்ளிட்ட ஐவர் இவ்விபத்தில் பலியான
வேளையில் பேருந்து ஓட்டுநரும் அதன் பயணிகளில் ஒருவரான ஒரு
பெண்ணும் உயிரிழந்தனர் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த விபத்தில் உயிரிழந்த அனைவரின் உடல்களும் பரிசோதனைக்காக
மலாக்கா மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டன என்று அவர்
சம்பவ இடத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
காயமடைந்தவர்களில் 17 பேர் மலாக்கா மருத்துவமனைக்கும் 10 பேர்
அலோர்காஜா மருத்துவமனைக்கும் மேலும் ஆறு பேர் ஆயர் குரோ
பந்த்தாய் மருத்துவமனைக்கும் கொண்டுச் செல்லப்பட்டனர் என்று அவர்
குறிப்பிட்டார்.
இந்த விபத்தில் சம்பந்தப்பட் பேருந்தில் 27 சுற்றுப்பயணிகள் பயணம்
செய்தனர். இந்த விபத்தில் அவர்களுக்கு உடலின் பல்வேறு பாகங்களில் காயங்கள் ஏற்பட்டன. அவர்களை அடையாளம் காணும் பணி தற்போது
மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் சொன்னார்.
இந்த விபத்து தொடர்பில் இரவு மணி 8.45 மணியளவில் தகவல்
கிடைத்ததைத் தொடர்ந்து 27 பேர் கொண்ட மீட்புக் குழுவினர் சம்பவ
இடத்திற்கு விரைந்தாக முகமது பிசார் தெரிவித்தார்.
இந்த விபத்தின் காரணமாக நெடுஞ்சாலையின் இரு மருங்கிலும் 10 கிலோ
மீட்டர் தொலைவிக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


