புத்ராஜெயா, டிச. 21 - வரும் புதன்கிழமை கொண்டாடப்படவிருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் ஆண்டு இறுதிப் பள்ளி விடுமுறையை முன்னிட்டு நகரிலுள்ள பொதுமக்கள் கிழக்கு, வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் உள்ள தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால் முக்கிய நெடுஞ்சாலைகளில் தினசரி வாகனப் போக்குவரத்து கடுமையாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அக்காலக்கட்டத்தில் 25.5 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய நெடுஞ்சாலை வாரியத்தின் (எல்.எல்.எம்.) தலைமை இயக்குநர் டத்தோ சசாலி ஹருண் கூறினார்.
சுமார் 21.2 லட்சம் வாகனங்கள் பிளஸ் விரைவுச் சாலையைப் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலையை 188,130 வாகனங்களும் கிழக்கு கடற்கரை 1 ஆம் கட்ட நெடுஞ்சாலையை 39,830 வாகனங்களும் இரண்டாம் கட்ட நெடுஞ்சாலையை 87,380 வாகனங்களும் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் சொன்னார்.
கிறிஸ்மஸ் விடுமுறையின் போது சுமூகமான போக்குவரத்தை உறுதி செய்வதற்காக வாகனமோட்டிகளின் பாதுகாப்பான மற்றும் தடையற்ற பயணங்களை உறுதிசெய்ய முழுமையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அனைத்து நெடுஞ்சாலை நிறுவனங்களையும் தாங்கள் அறிவுறுத்தியுள்ளதாக சசாலி இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு தேசிய நெடுஞ்சாலையில் பயணிப்பவர்களுக்கு திங்கள்கிழமை நள்ளிரவு 12.01 மணி முதல் செவ்வாய்கிழமை இரவு 11.59 மணி வரை கட்டணமில்லா பயணத்தை அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.
நெடுஞ்சாலை பயனீட்டாளர்களின் வசதிக்காக எல்.எல் எம். போக்குவரத்து மேலாண்மை மையம் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் என்று சசாலி கூறினார்.


