கோலாலம்பூர், டிச.21 - இவ்வாண்டு டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள இந்தியப் பிரஜைகளுக்கான விசா விலக்களிப்புச் சலுகையை அரசாங்கம் 2026 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது.
அடுத்தாண்டு மலேசியா ஏற்கவிருக்கும் ஆசியான் தலைவர் பொறுப்பு மற்றும் 2026 ஆம் ஆண்டு மலேசியாவுக்கு வருகை தாருங்கள் இயக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விசா சலுகை நீட்டிப்பு அமைகிறது என்று உள்துறை அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ அவாங் அலிக் ஜெமான் கூறினார்.
முன்னதாக, சீன நாட்டினருக்கு இதே போன்ற விசா சலுகை நீட்டிப்புக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்தது. அதே தேதி வரை இது நடைமுறையில் இருக்கும் என்று அவர் நேற்றிரவு வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விசா விலக்குச் சலுகை, தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் அதே வேளையில் மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான விசா தாராளமயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாகும் அமைகிறது.
இந்த விசா விலக்கு மூலம் இந்திய மற்றும் சீன நாட்டவர்கள் 30 நாட்கள் வரை விசா இல்லாமல் மலேசியாவுக்குள் பயணிக்க முடியும்.


