பேருந்துகள் குறிப்பாக, பெருநாள் காலங்களில் இரண்டாவது ஓட்டுநரைக்
கொண்டிருப்பது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
விபத்துக்களை தவிர்ப்பதற்கு ஏதுவாக பேருந்து ஓட்டுநர்கள் கவனமுடனும்
சாலை விதிகளைப் பின்பற்றி பேருந்துகளைச் செலுத்துவதை உறுதி
செய்ய உரிய கண்காணிப்பை மேற்கொள்ளும்படி சாலை போக்குவரத்து
இலாகாவை (ஜே.பி.ஜே.) போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்
கேட்டுக் கொண்டார்.
இந்த விஷயத்தை இலகுவாக எடுத்துக் கொள்ளாதீர்கள். பேருந்தைச்
செலுத்தும் போது ஓட்டுநர்கள் கைப்பேசியைப் பயன் படுத்தாமல் இருப்பதையும்
விதிமுறைகள் மீறப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பேருந்து உடனடியாக
நிறுத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பேருந்து ஓட்டுநர்
மட்டுமல்ல, சம்பந்தப்பட்ட பேருந்து நிறுவனமும் இதற்கு பொறுப்பேற்க
வேண்டும் என அவர் கூறினார்.
இங்குள்ள கூச்சிங் சென்ட்ரல் பேருந்து முனையைத்தில் சரவா மாநில
நிலையிலான 2024 கிறிஸ்துமஸ் சாலை பாதுகாப்பு இயக்கத்தை தொடக்கி
வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
சரவா மாநிலத்தில் இவ்வாண்டு செப்டம்பர் வரை சாலை விபத்துகளின்
எண்ணிக்கை கடந்தாண்டை காட்டிலும் 2.4 விழுக்காடு அதிகரித்து
19,964ஆக பதிவாகியுள்ளதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.


