கோலாலம்பூர், டிச.20 - காணாமல் போன மலேசியா ஏர்லைன்ஸ் எம்.எச்.370 விமானத்தின் உடைந்த பாகங்களைத் தேடும் பணியை மீண்டும் தொடங்குவதற்கு மலேசியா கொள்கையளவில் ஒப்புக்கொண்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் இன்று தெரிவித்தார்.
பத்து ஆண்டுகளுக்குப் முன் அந்த விமானம் காணாமல் போன சம்பவம் உலக வான் போக்குவரத்து வரலாற்றில் அவிழ்க்க முடியாத மர்மமாக இன்று வரை இருந்து வருகிறது.
227 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் பயணம் செய்த அந்த போயிங் 777 விமானம் 2014 மார்ச் 8ஆம் தேதி கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் செல்லும் வழியில் மாயமானது.
தென்னிந்தியப் பெருங்கடலின் ஒரு புதிய பகுதியில் விமானத்தை தேடுவதற்கான பரிந்துரை ஓஷியன் இன்பினிட்டி ஆய்வு நிறுவனத்திடமிருந்து கிடைத்துள்ளதாக அந்தோணி லோக் கூறினார். அந்த விமானத்தை தேடும் முயற்சியை இதே நிறுவனம்தான் கடந்த 2018ஆம் ஆண்டு மேற்கொண்டது.
விமானத்தின் கணிசமான பாகங்கள் கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் அந்நிறுவனம் 7 கோடி அமெரிக்க டாலரை (31.57 கோடி வெள்ளி) பெறும் என்று லோக் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
பயணிகளின் உறவினர்களுக்கான எங்களின் பொறுப்பும் கடமையும் அர்ப்பணிப்பும் இதுவாகும் என்று அவர் கூறினார்.
இந்த முறை அனைத்தும் சாதகமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். கண்டுபிடிக்கப்படும் விமானத்தின் பாகங்களை காண குடும்பங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று அவர் சொன்னார்.
காணாமல் போவதற்கு முன் அந்த விமானம் வேண்டுமென்றே தடம் மாறிச் சென்றதற்கான சாத்தியத்தை மலேசிய புலனாய்வாளர்கள் நிராகரிக்கவில்லை.
கடலில் அடித்து வரப்பட்ட பாகங்களில் சில அந்த அந்த விமானத்திற்கு சொந்தமானவை உறுதிப்படுத்தப்பட்டவை என உறுதிப்படுத்தப்பட்டதன. மேலும் சில விமானத்தின் பாகங்களாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.


