தோக்கியோ, டிச. 20- சில இணைப்புகள் அவசியம் காரணமாகவும், சில இணைப்புகள் வசதிக்காக ஏற்படுத்தப்படும். ஆனால் ஹோண்டா-நிசான் ஆகிய வாகன ஜாம்பான்களின் இணைப்பு உலகையே உலுக்கி வரும் சீன ஆதிக்கத்திலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஜப்பானின் இரண்டாவது பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான ஹோண்டாவும் மூன்றாவது பெரிய வாகனத் தயாரிப்பு நிறுவனமான நிசானும் ஹோல்டிங் நிறுவனம் ஒன்றை அமைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக அந்நிறுவனங்களுக்கு அணுக்கமான வட்டாரங்கள் கூறின.
அவ்விரு வாகனத் தயாரிப்பு நிறுவனங்களையும் ஒன்றிணைப்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களைப் போலவே ஹோண்டாவும் நிசானும் உலகின் பெரிய வாகனச் சந்தையான சீனாவில் தங்களின் அடித்தளத்தை இழந்து விட்டன. சீனாவின் புத்தாக்கம் நிறைந்த, மென்பொருள்கள் பொருத்தப்பட்ட மின்சார மற்றும் ஹைபிரிட் கார்கள் வாடிக்கையாளர்களை பெரிதும் கவரத் தொடங்கி விட்டன.
சீனாவில் விற்பனை குறைந்த காரணத்தால் கடந்த மாதம் 15 விழுக்காட்டு காலாண்டு லாபத்தை தாங்கள் இழந்து விட்டதோடு ஊழியர்களின் எண்ணிக்கையையும் குறைத்து விட்டதாக ஹோண்டா தெரிவித்துள்ளது.
சீனா மற்றும் அமெரிக்காவில் ஏற்பட்ட விற்பனை சரிவு காரணமாக உலகம் முழுவதும் 9,000 பேரை வேலை நீக்கம் செய்யவுள்ளதோடு உற்பத்தித் திறனையும் 20 விழுக்காடு குறைக்கவுள்ளதாக நீண்ட காலமாக நெருக்கடியை எதிர்நோக்கி வரும் நிசான் நிறுவனம் அறிவித்துள்ளது.


