கங்கார், டிச. 20- கோல பெர்லிஸ் பெர்ரி முனையம் அருகே 690 கார்களை நிறுத்தும் வசதி கொண்ட பல அடுக்கு நிறுத்துமிடம் உருவாக்கப்படும். சுற்றுப்பயணிகளின் வசதிக்காக இந்த கார் நிறுத்துமிட வசதி ஏற்பாடு செய்யப்படுவதாக கங்கார் நகராண்மைக் கழக தலைவர் அப்பாண்டி ரஜினி காந்த் கூறினார்.
ஏழு மாடிகளைக் கொண்ட இந்த கார் நிறுத்துமிடத்தைக் நிர்மாணிப்பதற்கு வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சிடமிருந்து அனுமதி கிடைக்கப்பெற்றுள்ள வேளையில் அதன் கட்டுமானம் விரைவில் தொடங்கி வரும் 2026ஆம் ஆண்டு முற்றுப் பெறும் என்று அவர் சொன்னார்.
இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கிய வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சுக்கு நாங்கள் நன்றி கூறிக்கொள்கிறோம். இந்த திட்ட அமலாக்கத்தின் மூலம் இப்பகுதியில் நிலவி வரும் கார் நிறுத்துமிடப் பிரச்சினைக்குத் தீர்வு காண இயலும் என்று அவர் குறிப்பிட்டார்.
கங்கார் நகராண்மைக் கழகத் தலைவராக அப்பாண்டி தேர்ந்தெடுக்கப்பட்டு 100 நாட்கள் நிறைவடைதையொட்டி நேற்று இங்கு நடத்தப்பட்ட தேநீர் விருந்து நிகழ்வின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
குப்பைகளை பொது இடங்களில் வீசுவதற்கு எதிரான அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள நகராண்மைக் கழகம் சிறப்பு பணிக்குழுவை அமைக்கவுள்ளதாகவும் அவர் சொன்னார். சிகிரெட் துண்டுகள் உள்பட குப்பைகளை கண்ட இடங்களில் வீசுவோருக்கு சம்பவ இடத்திலேயே குற்றப்பதிவுகளை வழங்குவதற்காக இந்த பணிக்குழு அமைக்கப்படுகிறது என அவர் சொன்னார்.
இத்தகைய குற்றங்களுக்கு வெ.10.00 முதல் வெ.50.00 வரை அபராதம் விதிக்கப்படும். எனினும், இந்த அமலாக்க நடவடிக்கையை மேற்கொள்வதற்கு முன்னர் வரும் 2025 மார்ச் வரை பொது மக்களுக்கு இதன் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.


