கோல திரங்கானு, டிச. 20- இல்லாத முதலீட்டுத் திட்டத்தை நம்பி முதலீடு
செய்த தோட்ட நிர்வாகி ஒருவர் தனது மொத்த சேமிப்பான 205,983
வெள்ளியையும் இழந்தார்.
சமூக ஊடகங்களில் கோல்டன்க்ரிம்சன் முதலீட்டுத் திட்டத்தின் மூலம்
கிடைக்கும் அனுகூலங்கள் தொடர்பான விளம்பத்தினால 56 வயதான
அந்த நிர்வாகி பெரிதும் ஈர்க்கப்பட்டதாக கெமமான் மாவட்ட இடைக்காலப் போலீஸ் தலைவர் டிஎஸ்பி வான் முகமது வான் ஜாபர் கூறினார்.
கடந்த நவம்பர் 4ஆம் தேதி 5,000 வெள்ளியை முதலீடு செய்த அந்த
நிர்வாகி லாபமாக 4,708.50 வெள்ளியை பெற்றார் என்று அவர் அறிக்கை
ஒன்றில் குறிப்பிட்டார்
சந்தேகப் பேர்வழி கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் கடந்த நவம்பர் 4
முதல் டிசம்பர் 12 வரை எட்டு வங்கி கணக்குகளில் 12 பரிவர்த்தனைகளை
அந்த ஆடவர் மேற்கொண்டதாக அவர் சொன்னார்.
எனினும், அதன் பின்னர் செய்த முதலீடுகளுக்கு எந்த லாபத் தொகையும்
வராததைத் தொடர்ந்து அவர் நேற்று முன்தினம் போலீசில் புகார்
செய்ததாக வான் முகமது தெரிவித்தார்.
இந்த மோசடிச் சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 420வது
பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர்
மேலும் சொன்னார்.
சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்கள் வாயிலாக
விளம்பரப்படுத்தப்படும் இத்தகைய மோசடியான முதலீடுகளை நம்பி
ஏமாந்து விட வேண்டாம் என பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.


