கிள்ளான், டிச. 20 - சிலாங்கூருக்கு வருகை தாருங்கள் ஆண்டு 2025 (வி.எஸ்.ஒய்.2025) இயக்கத்தின் ஒரு பகுதியாக டூரிசம் சிலாங்கூர் ஹாப்-ஆன் ஹாப்-ஆஃப் (ஹோஹோ) இரட்டை மாடி பேருந்து சேவையை விரைவில் கிள்ளான் நகருக்கு விரிவாக்கம் செய்யவிருக்கிறது.
டிசம்பர் மாத இறுதிக்குள் இந்தச் சேவை கிள்ளானில் முழுமையாகச் செயல்படும் என்று கிள்ளான் அரச மாநகர் மன்ற டத்தோ பண்டார் டத்தோ அப்துல் ஹமிட் ஹுசேன் கூறினார்.
இந்த பேருந்து போர்ட் கிள்ளானில் தொடங்கி அரச கேலரி, ஜி.எம். கிள்ளான் பேரங்காடி , பாசார் ஜாவா மற்றும் சதுப்பு நிலச் சதுக்கம் உள்ளிட்ட இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா வழித்தடங்கள் வழியாகப் பயணம் மேற்கொள்ளும் என்று அவர் சொன்னார்.
கிள்ளான் அரச மாநகர் மன்றத்தின் 2025 சுற்றுலா மற்றும் கலாச்சார நிகழ்ச்சி அட்டவணை மற்றும் ஹோஹோ பேருந்து சேவையின் தொடக்க நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் டூரிசம் சிலாங்கூர் தலைமை செயல் அதிகாரி அஸ்ருல் ஷா முகமதுவும் கலந்து கொண்டார்.
மலேசியாவின் பழமையான நகரங்களில் ஒன்றான கிள்ளானின் வரலாற்று முக்கியத்துவத்தைப் பற்றி சுற்றுலாப் பயணிகளுக்கு எடுத்துரைக்கும் அதேவேளையில் வட்டார பொருளாதாரத்தையும் உயர்த்த விரும்புகிறோம் என்று அவர் சொன்னார்.
இதற்கிடையில், இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்த்த ஊராட்சி மன்றங்களின் வரிசையில் கிள்ளான் நான்காவது இடத்தைப் பிடித்ததாக அவர் கூறினார்.
கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி 459,979 வருகையாளர்களை கிள்ளான் பதிவு செய்துள்ளது என்று அப்துல் ஹமிட் மேலும் குறிப்பிட்டார்.


