ஈப்போ, டிச 20: ஶ்ரீ இஸ்கண்டாரில் உள்ள பொது உயர்கல்வி கூடத்தில் மாணவர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பாக மூன்று மாணவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட மாணவரின் தந்தையிடமிருந்து புகாரைப் பெற்ற பின்னர் 18 முதல் 20 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப் பட்டதாக பேராக் தெங்கா மாவட்ட காவல் துறைத் தலைவர் ஹஃபீசுல் ஹெல்மி ஹம்சா தெரிவித்தார்.
"பாதிக்கப் பட்டவரின் தந்தை டிசம்பர் 15 அன்று பல்கலைக் கழக விடுதியில் தனது 18 வயது மகன் வகுப்புத் தோழர்களால் தாக்கப் பட்டதாக காவல்துறையில் புகார் அளித்தார்.
“பாதிக்கப்பட்ட மாணவருக்கு காதில் காயங்கள், வலது புருவத்தின் மேல் பகுதியில் வெட்டுக்கள் மற்றும் வீக்கம், இடது கை மற்றும் காலில் காயங்கள், வயிறு மற்றும் கழுத்தில் சிவப்பு அடையாளங்கள் இருந்தன.
“தற்போது பாதிக்கப் பட்டவர் சிகிச்சைக்குப் பிறகு சீரான நிலையில் உள்ளார்
விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில், தங்குமிட அறையில் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இச் சம்பவம் ஏற்பட்டது என்று ஹஃபீசுல் ஹெல்மி கூறினார்.
சந்தேக நபர்கள் அனைவரும் கடந்த புதன்கிழமை தொடங்கி மூன்று நாட்களுக்கு காவல்துறையினரின் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு, குற்றவியல் சட்டத்தின் 147வது பிரிவின் கீழ் புகார் விசாரிக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப் பட்டதாக அவர் கூறினார்.
– பெர்னாமா


