ஷா ஆலம் டிச. 20 - சிலாங்கூர் முழுவதும் உள்ள பள்ளிகளில் அடிப்படை
வசதிகளை மேம்படுத்த கடந்த 2009ஆம் ஆண்டு முதல் மாநில அரசு 28
கோடியே 50 லட்சம் வெள்ளியைச் செலவிட்டுள்ளது.
பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகள் உகந்த சூழலில் இருப்பதை
உறுதி செய்யும் நோக்கிலான இந்த முன்னெடுப்பு சிலாங்கூர் பள்ளி உதவி
நிதித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ
அமிருடின் ஷாரி கூறினார்.
மாநிலம் கல்வியை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும்.
சுய அடையாள அடித்தளத்திற்கான முதுகெலும்பாகவும் கல்வி விளங்க
வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
விளையாட்டு, கலாச்சாரம், பொருளதாரம் உள்பட மேம்பாடு சார்ந்த
எதுவாக இருந்தாலும் கல்வி முக்கிய உந்து சக்தியாக விளங்க வேண்டும்
என்று அவர் கூறினார்.
நேற்று இங்கு நடைபெற்ற 2024ஆம் ஆண்டிற்கான சிலாங்கூர்
பள்ளிகளுக்கான மாநில அரசின் நிதியுதவித் திட்ட நிகழ்வில்
உரையாற்றிய போது அவர் இவ்வாறு சொன்னார்.
அனைத்து தரப்பினரையும் அரவணைப்பதற்கு ஏதுவாக கல்வியின் வழி
நீதி மற்றும் சமத்துவக் கூறுகளை நாம் ஈரக்க வேண்டும் என்று அவர்
மேலும் குறிப்பிட்டார்.
மாநில நிலையில் மந்திரி புசார் பதவியோடு கல்வித் துறையையும்
எனது பொறுப்பில் எடுத்துக் கொள்வதற்குரிய உந்துதலை இது எனக்கு
வழங்கியது என்றார் அவர்.
இந்நிகழ்வில் தேசியப் பள்ளிகள், தமிழ் மற்றும் சீனப்பள்ளிகள் உள்பட
மாநிலத்திலுள்ள ஆறு வகையான 825 பள்ளிகளுக்கு மாநில அரசின்
சார்பில் 2 கோடியே 65 லட்சம் வெள்ளி வழங்கப்பட்டது.


