கோலாலம்பூர், டிச.19 - ஆட்சியாளரையும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமையும் அவமதித்ததாகக் கூறப்படும் சமூக ஊடக பிரபலம் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தனது டிக்டாக் கணக்கில் அவமரியாதையான உள்ளடக்கத்தை வெளியிட்டதாகக் கூறப்படுவது தொடர்பில் புகார் செய்யப்பட்டதைத் தொடர்ந்து 22 வயதுடைய அந்நபர் கடந்த செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 17) ஜோகூரில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ரஸாருடின் ஹூசேன் கூறினார்.
இதன் தொடர்பில் 1948ஆம் ஆண்டு நிந்தனைச் சட்டத்தின் 4(1) வது பிரிவு மற்றும் 1998 ஆம் ஆண்டு தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் 233வது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்படுகிறது என்று அவர் இன்று பெரானாமா தொடர்பு கொண்டபோது தெரிவித்தார்.
பொது பாதுகாப்பு மற்றும் தேசிய நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கில் அரச அமைப்பு முறைக்கு தீங்கு விளைவிக்கும், இழிவுபடுத்தும் அவமதிக்கும் மற்றும் வெறுப்பைத் தூண்டும் வகையிலான அறிக்கைகளை வெளியிட்டதாக அந்நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று ரஸாருடின் தெளிவுபடுத்தினார்.
இச்செயலுக்காக அந்த பிரபலம் தனது டிக்டோக் கணக்கு மூலம் மன்னிப்புக் கோரியதைத் தொடர்ந்து அவரை காவலில் வைக்க செய்யப்பட்ட விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்தது.
விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது. அடுத்த கட்ட நடவடிக்கைக்காக இது சட்டத் துறைத் தலைவர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும் என்று ரஸாருடின் கூறினார்.
அண்மையில் ஜோகூர் பாருவில் ஹலால் சான்றிதழைக் கொண்டிருக்கவில்லை எனக் கூறப்படும் ஒரு உணவகத்தில் மேன்மை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம், ஜோகூர் துங்கு மக்கோத்தா இஸ்மாயில் மற்றும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆகியோர் உணவருந்தியதை விமர்சித்து அந்த ஆடவர் கருத்தை வெளியிட்டிருந்தார்.
சமூக ஊடகங்களில் விமர்சனங்களை எதிர்கொண்ட பிறகு அவர் தனது செயலுக்காக மன்னிப்பு கோரியதோடு அதன் தொடர்பான டிக்டோக் காணொளியையும் நீக்கினார்.


