ஷா ஆலம், டிச 19 - தும்பாட்டில் உள்ள தாமான் ஸ்ரீ பாயு மற்றும் தாமான் ஸ்ரீ டாலாம் ரூ வட்டாரத்தில் ஏஹ்சான் மடாணி குழுவினர் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கிய தூய்மைப்படுத்தும் பணியின் மூலம் மொத்தம் 121.82 டன் வெள்ளக் கழிவுகள் அகற்றக்கப்பட்டன.
காலை 8.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையில் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த 130 உறுப்பினர்கள் பங்கேற்ற வேளையில் 11 'ரோல் ஆன் ரோல் ஆஃப்' (ரோரோ) குப்பைத் தொட்டிகளும் பயன்படுத்தப்பட்டதாக மாநில பேரிடர் மேலாண்மை பிரிவு கூறியது.
தூய்மைப்படுத்த வேண்டிய இடங்களை தும்பாட் மாவட்ட மன்றம் நிர்ணயித்த வேளையில் முதல் இரண்டு நாட்களில் மொத்தம் குப்பைகளை அகற்றுவதற்கான 56 பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன என்று அப்பிரிவு அறிக்கை ஒன்றில் கூறியது.
சிலாங்கூர் குடிமைத் தற்காப்புப் படை, ஊராட்சி மன்றங்கள், கும்புலான் டாருள் ஏஹ்சான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட், சிலாங்கூர் தன்னார்வத் தொண்டர்கள் (செர்வ்) மற்றும் டீம் சிலாங்கூர் குழுவினர் ஓய்வெடுக்கத் தயாராகி வருகின்றனர்.
# கித்தா சிலாங்கூர் பரிவு கிளந்தான் வெள்ளப் பணியை வெற்றியடையச் செய்வதற்கு சிறந்த அர்ப்பணிப்பைக் காட்டிய அனைத்து ஊழியர்களுக்கும் மனமார்ந்த நன்றி என்று அந்த அறிக்கை கூறியது.
வெள்ளத்திற்குப் பிந்தைய துப்புரவு நடவடிக்கைகளுக்காக கிளந்தானுக்கு ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்களைக் கொண்ட ஏஹ்சான் மடாணி அணியை கடந்த திங்கட்கிழமை மந்திரி புசார் வழியனுப்பி வைத்தார்.
செவ்வாய் முதல் வியாழன் வரை துப்புரவுப் பணிகளை மேற்கொள்வதற்காக டேங்கர்கள், ரோரோ லோரிகள் உள்ளிட்ட 45 இயந்திரங்களை உள்ளடக்கிய குழு அங்கு செல்வதாக அவர் கூறியிருந்தார்.


